அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை கூட்டுறவு துணை தலைவராக அமமுக பிரமுகர் வெற்றி பெற அமைச்சர் செல்லூர் ராஜூ உதவியதாக கூறி அதிமுக இயக்குநர் 4 பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செயல்பட்டு வரும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயக்குநர்களுக்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் உள்ள மொத்தம் 17 இடங்களில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. அதிமுக சார்பில் 4 பேர், அமமுக சார்பில் 4 பேர், கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 4  பேர் தேர்வு பெற்றனர். 

இதில் தலைவராக அதிமுக ஒன்றிய ரவிச்சந்திரன் என்பவரும், துணை தலைவர் பதவிக்கு அமமுகவைச் சேர்ந்த மேலூர் கதிரேசன் என்பவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத்தலைவர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்தவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பிருந்தும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோரின் தலையீட்டால் அமமுக வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அதிமுகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் அதிருப்தியடைந்த அதிமுகவை சேர்ந்த நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பரமேஸ்வரி, சுசிலா, விஜயலட்சுமி, ராஜ்குமார் ஆகிய 4 பேர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆலையின் நிர்வாக இயக்குனர் பொன்னம்மாளிடம்  கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் இவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தனர். இதுகுறித்து அதிமுகவினர் சிலர் கூறுகையில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் இடையே நிலவும் கோஷ்டி பூசல் காரணமாகவே ஆலை தேர்தலில் துணைத்தலைவர் பதவியை அதிமுக இழந்துள்ளது என்கின்றனர். 

ஏற்கனவே சசிகலா மீது உள்ள பாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வரும் செல்லூர் ராஜூவின் இந்த செயல்பாடு எடப்பாடி அணியை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.