சட்டமன்றத்தில் கொடநாடு என்றதும் திருடனை போல் ஓடிச்சென்று எடப்பாடி பழனிசாமி சாலையில் உட்கார்ந்து  விடுகிறார். 2024ல் தேர்தல் வரும் என்று எடப்பாடி கூறுகிறார். 

அமெரிக்க ஜனாதிபதி, இங்கிலாந்து பிரதமர் உள்பட உலக தலைவர்கள் 2 மாதத்துக்கு ஒருமுறை ஓய்வெடுப்பார்கள். ஆனால் ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் ஸ்டாலின் உழைக்கிறார் என ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

 சென்னை ஆலந்தூர் 165வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வரபிரசாத்தை ஆதரித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி ஆகியோர் ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்தனர். அப்போது இளங்கோவன் பேசுகையில்;-மக்களின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடும் இயக்கம் காங்கிரஸ். ஆனால், அதிமுகவும், பாஜகவும் நாட்டை பிளவு படுத்தியும், சுரண்டியும் பதவி சுகத்துக்காக அலைக்கின்றனர்.

நாடாளுமன்ற, சட்டமன்றம் தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை தந்தீர்கள். அதேபோல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தரவேண்டும். இந்த தேர்தல் முடிவு முதலமைச்சர் ஸ்டாலினின் கரத்தை பலப்படுத்துவதாக இருக்கும். முதலமைச்சராக பதவி ஏற்றபின் எழுச்சிமிக்கவராக கடுமையாக உழைக்கிறார். உழைக்கின்ற தலைவராக ஸ்டாலின் உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி, இங்கிலாந்து பிரதமர் உள்பட உலக தலைவர்கள் 2 மாதத்துக்கு ஒருமுறை ஓய்வெடுப்பார்கள். ஆனால் ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் உழைப்பவர் ஸ்டாலின். இந்த 8 மாத ஆட்சியில் கட்சி வேறுபாடின்றி தமிழர்களுக்காக உழைக்கிறார். அதிமுக கட்சியாகவே இல்லை. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஏன் ஜெயலலிதாவையே மறந்துவிட்டார்கள். தலைவர்களை மறந்துவிட்ட அதிமுகவுக்கு பாடம் புகட்ட அதிமுகவை மக்கள் மறந்து சமாதி கட்டவேண்டும். 

உதயநிதி ஸ்டாலின் கூறியதுபோல் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என 2 அமாவாசைதான் உள்ளது. ஸ்டாலின் மக்களை சந்திக்க பயப்படுகிறார் என்று எடப்பாடி கூறுவது தவறு. அவர் லட்சக்கணக்கான மக்களை காணொலி மூலம் சந்திக்கிறார். சட்டமன்றத்தில் கொடநாடு என்றதும் திருடனை போல் ஓடிச்சென்று எடப்பாடி பழனிசாமி சாலையில் உட்கார்ந்து விடுகிறார். 2024ல் தேர்தல் வரும் என்று எடப்பாடி கூறுகிறார். நிச்சயமாக வராது. ஆனால் 2024ல் எடப்பாடி பழனிசாமி சிறையில் இருப்பார். கொடநாடு கொள்ளைக்கும் கொலைக்கும் அவர்தான் காரணம் என விகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.