Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் நடத்திய ‘டபுள் கருத்துக்கணிப்பு’..! சர்வே முடிவும், முதல்வரின் ரியாக்‌ஷனும்

மு.க.ஸ்டாலின் கட்சியின் சீனியர்கள் மூலமாக ஒரு ‘எக்ஸிட் போல் சர்வேயும்’, உளவுத்துறை போலீஸை வைத்து இன்னொரு எக்ஸிட் போல் சர்வேயும் எடுத்துள்ளாராம்

CM Stalin's double exit poll result and his reaction
Author
ch, First Published Feb 21, 2022, 11:40 AM IST

பெரும் புயலடித்து ஓய்ந்தது போல் இருக்கிறது தமிழக அரசியல் களம்.  சட்டமன்ற பொது தேர்தலுக்கு இணையான பரபரப்புடனும், மாளாத பணப்புழக்கத்துடனும், ஒரு கொலை மற்றும் சில பல ரத்தக் காயங்களுடனும், சில கட்சி தாவல்களுடனும், பல நம்பிக்கை துரோகங்களுடனும், சில முட்டல் மோதல்களுடனுமாக நடந்து முடிந்திருக்கிறது இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.

வேட்பாளர்களும், அவர்களின் வெற்றிக்காக ராப்பகலாய் உழைத்தவர்களும், அவர்களின் தோல்விக்கு ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தியவர்களும் கடுமையான அலுப்பில் கன்னாபின்னாவென ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை! சொல்ல முடியாது பெரும் போர் மூண்டாலும் மூளலாம். வெற்றி என்றால் கொண்டாடவும், தோல்வி என்றால் தேற்றிக் கொள்ளவும் தெம்பு வேண்டுமில்லையா! அதனால் கட்டாய ஓய்வில் உள்ளனர்.

மூளை உறங்கினாலும் இதயம் உறங்காதே! அது உறங்கினால் அதன் பின் ஒன்றும் இல்லாமல் போய்விடும் இல்லையா! அது போல, தொண்டர்களும் நிர்வாகிகளும் உறங்கினாலும் கூட தலைவர்கள் தெளிவான விழிப்பில் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியான தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் சீனியர் நிர்வாகிகள் மூலமாக ஒரு ‘எக்ஸிட் போல் சர்வேயும்’ அதில் வரும் ரிசல்ட்டை கிராஸ் செக் செய்வதற்காக உளவுத்துறை போலீஸை வைத்து இன்னொரு எக்ஸிட் போல் சர்வேயும் எடுத்துள்ளார்.

CM Stalin's double exit poll result and his reaction

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கான  தலைமை நிர்வாக பதவி அதாவது மாநகராட்சியின் மேயர், நகராட்சியின் சேர்மன், பேரூராட்சியின் பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளை எந்த கட்சி பிடிக்கும்,? தி.மு.க. அத்தனை பதவிகளையும் பிடித்துவிடுமா? அல்லது எவ்வளவு கிடைக்கும்! இதில் அ.தி.மு.க பதவிகளை பிடிக்குமா? அவை எந்தெந்த மாவட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள்? பா.ஜ.க.வுக்கு எத்தனை வார்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது! என்று அந்த இரு ரிப்போட்களையும் வைத்து விரிவாக அலசியுள்ளார்.

கட்சி புள்ளிகள் மற்றும் உளவுத்துறை இரண்டு தரப்பும் கொடுத்த ரிப்போர்ட் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகதான் உள்ளதாம். ரிப்போர்ட்டின் முடிவானது ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி தருவதாகதான் உள்ளது. ஆனாலும் சில இடங்களில் அ.தி.மு.க. முன்னிலை பெறும் என்றும் அதில் வந்துள்ளதாம். அதைத்தான் முதல்வரால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள். ஏன் இந்த சறுக்கல் அந்த இடங்களில்? என்று கேள்விகளை அடுக்கியுள்ளார்.  தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்த 9 மாதங்களில் நடக்கும் தேர்தலில் சாதகமான ரிசல்ட் கிடைப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், ஏன் நூறு சதவீத வெற்றியை பெறும் சூழல் இல்லை என்பதே முதல்வரின் கேள்வி.

இருந்தாலும் பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் மூலம் அதிகாரப்பூர்வமான ரிசல்ட் வந்த பின், சறுக்கிய இடங்களின் பொறுப்பாளர்களிடம் விசாரணையும், தேவைப்பட்டால் சாட்டை சுழற்றி பதவியை பறிக்கும்  அதிரடிகளும் அரங்கேறும் என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios