சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் பற்றி ஈபிஎஸ் கேள்வி... தக்க பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமானச் சின்னம் எனக் கருதுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

cm stalin anwers eps question about virudhachalam incident

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமானச் சின்னம் எனக் கருதுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தனியார் தொடக்கப் பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி என்பவரை 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையில், விருத்தாசலம் நகராட்சியின் வார்டு எண் 30ல் திமுக கவுன்சிலராக இருந்த பக்கிரிசாமி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதோடு, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவும் செயல்பட்டதற்காக, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  இந்த நிலையில் சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விருத்தாசலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் தாளாளரான திமுக கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: 

இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  விருத்தாசலத்தில் உள்ள சக்தி நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில் யுகேஜி படிக்கும் 6 வயது சிறுமி ஏப்ரல் 11 ஆம் தேதி பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு தனக்கு வயிறு வலிப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.  அந்தச் சிறுமியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, அந்தச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து, அந்தச் சிறுமி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், அப்பள்ளியின் தாளாளரும், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருமான பக்கிரிசாமி என்பவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு, பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்திட நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

இதையும் படிங்க: 

குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி, விருத்தாசலம் நகர மன்றத்தின் 30வது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனேயே, அவரின் திமுகவின் அடிப்படை உறுப்பினர் நிலை ரத்து செய்யப்பட்டு, கட்சியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் உரிய விசாரணையை மேற்கொண்டு வருகிறார். எங்களது அரசைப் பொறுத்தவரையில், நான் செய்தியைக் கேள்விப்படவில்லை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன் என்று நான் சொல்லத் தயாராக இல்லை. இந்தச் செய்தியை அறிந்தவுடனேயே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசினேன். சம்பந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்து, அது தொடர்பான செய்தியை எனக்குத் தந்தார்கள். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அதிலும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமானச் சின்னம் எனக் கருதுகிறோம். அந்த வகையில், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுத்திடுவோம் என்பதை இந்த அவையில் நான் உறுதியோடு பதிவு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios