1.26 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் அரசுப்பணி ஆணை..! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த முதல்வர்...! 

மக்கள் பணிக்காக அக்டோபர் 2ஆம் தேதி முதல் கிராமப்புற மற்றும் ஊரக அளவில் தனியாக  செயலகங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராக பதவியேற்ற கையேடு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார். இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிளம்பியது.

அவர் அறிவித்தபடி, நாட்டிலேயே முதல்முறையாக மிக அதிக எண்ணிக்கையில் அதாவது 1.26 லட்சம் பேர் அரசு வேலையில் அமர்த்த, இன்று ஹைதராபாத்தில் ஒரே நேரத்தில் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வு இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. 

அரசு வேலை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியான பின்னர், 21 லட்சம் பேர் ஐந்து வேலைக்காக விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக செப்டம்பர் 1ம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையில் 19.50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் தேர்வாகி இன்று அவர்களுக்கான அரசு பணி ஆணை வழங்கப்பட்டது.இவர்கள் 500க்கும் மேற்பட்ட பொது சேவைகளில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஊரகப்பகுதியில் செயல்படும் செயலகங்களில் குறைந்தது 10 முதல் 12 ஊழியர்கள் அமர்த்தப்படுவார்கள் என்றும், இவர்களின் முக்கிய வேலையாக ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், சுகாதாரம்,விவசாயம், பொது சுகாதாரம் வருவாய் உள்ளிட்ட துறைகளின் சேவைகளை திறம்பட வழங்குவார்கள். இதே துறையில் வேலை செய்வதற்காக இதற்கு முன்னதாகவே 2.8 லட்சம் தன்னார்வலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, "புதிதாக அரசு வேலையில் சேர்பவர்கள் லஞ்சம் இல்லாத  சேவையை வழங்க உறுதி ஏற்க வேண்டும்; இதனை வேலையாக ஏற்காமல் சேவையாக செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அனைவருக்கும் பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்திலும் அரசு துறைகளில்  காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்து இருந்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

இந்த ஒரு அறிவிப்பு மேலும் மக்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் வேலைக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு மாபெரும் வாய்ப்பாக இந்த அறிவிப்பு அமைந்து உள்ளது. இதில் குறிப்பாக முதல்வர் பதவி ஏற்ற நாள் முதல் இன்றுவரை அதிரடியாக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் ஜெகன். இவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது என்பது கூடுதல் தகவல்.