கஜா புயலால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்திருக்கும் நிலையில், அவற்றை உடனே சரி செய்து விட இது ஒன்றும் ஜீபூம்பா சமாச்சாரமல்ல’ என்று கோபமடைந்துள்ளார் முதல்வர் எடப்பாடி.

கனத்த மழையின் காரணமாக புயல் பாதித்த பகுதிகளை முழுமையாகப் பார்வையிடமுடியாமல் சென்னை திரும்பினார் முதல்வர். இதை ஒட்டி அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த முதல்வர்,’ புயலால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்திருக்கின்றன. இவற்றை சரி செய்ய பல்லாயிரக்கணக்கான மின் வாரிய ஊழியர்கள் தியாக மனப்பான்மையோடு பணியாற்றி வருகிறார்கள்.

கஜா புயலால் புதுக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகள் கடும் சேதம் அடைந்துள்ளன.  புதுக்கோட்டை நகரத்தில் பல வீதிகளில் பல ஆண்டுகளாக இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

புயல் வருவதற்கு முன்பாகவே, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் பாதிப்புகள் குறைந்தன. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

 புதுக்கோட்டை நகருக்குள் நாளை மாலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.

புதுக்கோட்டை கிராமப் பகுதிகளில் 5 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். கஜா புயல் நிவாரணம் தொடர்பாக பிரதமரை 22ம் தேதி சந்திக்க வாய்ப்புள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். யாரும் விடுபடமாட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

பேரிடரின் போது கேரளாவைப்போல், தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இல்லை. மனசாட்சியுடன் எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் செயல்பட வேண்டும். இயற்கை சீற்றம் எப்படி வரும்  என்பதை யாரும் கணிக்க முடியாது. அரசு முழு மூச்சுடன் தேவையானதை செய்கிறது. நிவாரணப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், மீட்புக்குழுவினருக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அதைவிட்டுவிட்டு அவர்களைக் கொச்சைப்படுத்தக்கூடாது. இதே போல் சாய்ந்த மின் கம்பங்களை ஜீபூம்பா மந்திரம் போட்டு உடனே நிமிர்த்திவிட முடியாது. நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருமே அர்ப்பணிப்புடன் தான் ஈடுபட்டுவருகிறார்கள்’ என்றார்.