Asianet News TamilAsianet News Tamil

மாணவர்கள் எதிர்காலம் மண்ணா போச்சு.. பாஜக கூட்டணியை முதலில் வெட்டிவிடுங்க.. அதிமுகவை தூண்டிவிடும் ஸ்டாலின்.!

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய பாஜக அரசும் - அதிமுக அரசும் கைகோத்துக் கூட்டணி வைத்து இன்றைய தினம் திட்டமிட்டுக் கலைத்திருக்கிறது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

cm Edappadi Palanisamy should declare that there is no alliance with the BJP..mk stalin
Author
Tamil Nadu, First Published Oct 26, 2020, 6:23 PM IST

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய பாஜக அரசும் - அதிமுக அரசும் கைகோத்துக் கூட்டணி வைத்து இன்றைய தினம் திட்டமிட்டுக் கலைத்திருக்கிறது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்விக்கான இடங்களில், இந்தக் கல்வி ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

cm Edappadi Palanisamy should declare that there is no alliance with the BJP..mk stalin

“பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு இந்த ஆண்டு இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது” என்று எழுத்துபூர்வமாக மத்திய பாஜக அரசு எடுத்து வைத்த வாதத்தாலும், “இந்த ஆண்டே இட ஒதுக்கீடு கொடுங்கள்” என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட நால்வர் குழுவில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனதாலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்தப் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டே இட ஒதுக்கீடு கிடைத்துவிடும் என்று நினைத்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய பாஜக அரசும் - அதிமுக அரசும் கைகோத்துக் கூட்டணி வைத்து இன்றைய தினம் திட்டமிட்டுக் கலைத்திருக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மாநில அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை. பட்டியலின மாணவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டையும் அளிக்கவில்லை. இதனால் தமிழகத்திலும், அகில இந்தியாவிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட - பட்டியலின மாணவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசும் - அதிமுக அரசும் போட்டி போட்டுக்கொண்டு பொறுப்பற்ற முறையில் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் செயல்பட்டு - சட்டபூர்வமான உரிமையைத் தட்டிப் பறித்துள்ளன.

cm Edappadi Palanisamy should declare that there is no alliance with the BJP..mk stalin

"இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம்” என்று கூறும் பாஜக தலைமையிலான மத்திய அரசு பிடிவாதமாக உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் மூலமும், சத்தியப்பிரமாண வாக்குமூலமாகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்தது - இந்திய சமூக நீதி வரலாற்றில் கரும்புள்ளி. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 21 நாளில் இட ஒதுக்கீடு அளித்து - அதைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி - பல நூற்றாண்டு காலமாக வஞ்சிக்கப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு உரிமைகளில் எல்லாம் தாராளமாக ஆக்கிரமிப்பு நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு.

பாஜக ஆட்சியில் மண்டல்குழு பரிந்துரையின்படி 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வேலைவாய்ப்பில் முழுமையாகவும் இதர பிற்படுத்தப்பட்டோருக்குக் கொடுப்பதில்லை. மத்திய கல்வி நிறுவனங்களில் சட்டக் கல்வி, மருத்துவக் கல்வியிலும் இட ஒதுக்கீடு கொடுப்பதில்லை. மன்னிக்க முடியாத சமூக அநீதியைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசு எவ்விதத் தயக்கமும் இன்றி செய்து வருகிறது. இதை பிற்படுத்தப்பட்ட - பட்டியலின சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்வு ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் உள்ளங்களிலும் கொதித்துக் கொண்டிருப்பதை மத்திய பாஜக அரசு உணரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்றே கருதுகிறேன்.

மகாபாதகமான இந்தச் சமூக அநீதிக்கு மனமுவந்து துணை போகும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு “இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து விட்டு - அதற்காக அமைக்கப்பட்ட நால்வர் கமிட்டிக் கூட்டத்தில் அது பற்றியே வாய் திறக்காமல் அமைதி காத்து இரட்டை வேடம் போட்டது. 69 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது தொடர்பான அறிக்கை அந்தக் கமிட்டிக் கூட்டத்தில் கேட்கப்பட்டும் - அதைக் கடைசி வரை கொடுக்காமல் இழுத்தடித்தது. ஆகவே “நான் அடிப்பது போல் அடிக்கிறேன். நீ அழுவது போல் அழு” என்ற பாணியில் மத்திய பாஜக அரசும் - அதிமுக அரசும் இணைந்து கூட்டணி வைத்து இட ஒதுக்கீடு உரிமை மீது இடி விழுவது போன்ற தாக்குதலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

cm Edappadi Palanisamy should declare that there is no alliance with the BJP..mk stalin

ஆகவே, திமுக ஏற்கெனவே வலியுறுத்தியது போல் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்வியிடங்களில் இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் - பட்டியலின சமூகத்திற்காகவும் பிரதமர் காட்ட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது; பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட கமிட்டி கூட்டத்திற்காகக் காத்திராமல் - ஏற்கெனவே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சட்ட உரிமையாக உள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே செயல்படுத்தி - பிறகு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்குப் பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

cm Edappadi Palanisamy should declare that there is no alliance with the BJP..mk stalin

எல்லாவற்றிலுமே இரட்டை வேடம் போடாமல், சமூக நீதியைக் காப்பதிலும் கண்துடைப்பு நாடகம் நடத்தாமல், மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதல்வர் பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாகப் பிரதமருக்குக் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முதல்வர் பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios