மே 31-க்கு பிறகு தமிழகத்தில் 5-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 3-ம் தேதி வரை முழு ஊரங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன்பிறகு படிப்படியாக தளர்வுகளுடன் ஊரங்கு அமலில் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட சில மாவட்டங்கள்  தவிர பல மாவட்டங்களில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்னும் பொதுபோக்குவரத்து மட்டும் தொடங்கப்படவில்லை. 
அதேவேளையில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. சிவப்பு மண்டலங்களில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் பொருந்தாது என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது 4-ம் கட்டமாக அமலில் உள்ள ஊரடங்கு மே 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன்பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து அதன்படி எடுக்கப்படும் முடிவுகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும்வண்ணம் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதால், பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.