கர்நாடகாவில் அரசியல் சிக்கல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம், பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கடிதம் அளித்துள்ளார். அதில் 105 பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா  கூட்டணியில் இருந்து 14 எம்.எல்.ஏக்கள், அண்மையில் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில், ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி போராடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான சிவக்குமார் மும்பையில் தங்களது கட்சி எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றார். ஆனால், ஓட்டலில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

முன்கூட்டியே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார், சிவகுமாரை நட்சத்திர விடுதிக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால், கொட்டு மழையிலும் குடைபிடித்தபடி, சிவகுமார் அங்கு காத்து நின்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், இது தங்களது குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னை என்றும், தங்களது கட்சி எம்எல்ஏக்களை சந்திப்பது, தமது உரிமை என்றும் குறிப்பிட்டார். 

இதனிடையே, சிவக்குமாரை சந்திக்க, காங்கிரஸை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ ரமேஷ் மறுத்துள்ளார். நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அவர், செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் எம்எல்ஏ பதவியைதான் ராஜினாமா செய்துள்ளதாகவும், கட்சியில் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் 4 எம்எல்ஏக்கள், விரைவில் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும் ரமேஷ் கூறினார்.  

இதைத்தொடர்ந்து சொகுசு விடுதிக்கு வெளியே காத்திருப்பு போராட்டம் நடத்திய அமைச்சர் சிவக்குமாரை, மகாராஷ்ட்ர மாநில போலீசார் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிவக்குமாருடன் சேர்த்து, மகாராஷ்ட்ர காங்கிரஸ் மூத்த தலைவர் மிலிந்த் தியோரா மற்றும் கர்நாடக அமைச்சர்களான ஜி.டி.தேவகவுடா, சி.என்.பாலகிருஷணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.