சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபர்  ஜின்பிங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அடுத்த மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியா வரும்போது டெல்லியில்தான் பிரதமர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம். நரேந்திர மோடி பிரதமரான பிறகு இந்தியாவின் வேறு நகரங்களிலும் வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் பிரதமர் அபே பிரதமர் நரேந்திரமோடியை அகமதாபாத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
இந்நிலையில் அடுத்த மாதம் இந்தியா வர உள்ள சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சென்னையிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான பணிகளை வெளியுறவுத் துறை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா சீனா இடையே பல்வேறு பிரச்னைகள் நிலவிவந்தாலும் இரு நாட்டுத் தலைவர்களும் அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.


இரு தலைவர்களும் கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரலில் சீனாவின் வுஹான் நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்நிலையில் இந்திய பிரதமரை சீன அதிபர் மாமல்ல்புரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சீன அதிபர் ஜி பிங், இந்தியப் பிரதமர் மோடி இடையிலான பேச்சு மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-13 தேதிகளில் நடைபெறுகிறது: மத்திய அரசு... பல்லவ மன்னர்கள் ஆண்ட மண்னில், சீனாவில் வணங்கப்பட்ட போதி தர்மர் பிறந்த மண்ணில் இந்த பேச்சுக்கள் நடப்பது நமக்கு பெருமை தானே!” என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.