Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை எதிர்த்து போராடும் நேரம் வந்துடுச்சு.. மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட தலைமை செயலாளர்..!

கொரோனாவை எதிர்த்து முழுமையாக போராட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடியாக கடிதம் எழுதியுள்ளார்.

chief secretary shanmugam letter to district collectors
Author
Tamil Nadu, First Published Jun 23, 2020, 3:14 PM IST

கொரோனாவை எதிர்த்து முழுமையாக போராட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடியாக கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வேகமாக ஜெட் வேகத்தில் பரவி வருவதையடுத்து ஜூன் 30ம் தேதி இம்மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  எனினும், தற்போது, சென்னையை மையமாக வைத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.  இந்நிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். 

chief secretary shanmugam letter to district collectors

அதில், மாவட்ட குழுக்களின் அர்ப்பணிப்பான பணிகளின் மூலமே கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீப நாட்களில் சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து செல்பவர்கள், இடம் மாறி வரும் தொழிலாளர்கள், வேறு மாநிலம், நாடுகளில் இருந்து வருபவர்கள், வேறு மண்டலங்களில் இருந்து செல்பவர்களால் தொற்று அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் இன்புளுயன்சா, மூச்சுத்திணறல் போன்ற கொரோனா அறிகுறிகள் உள்ளோரின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளது. எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் கலெக்டர்கள் இன்னும் விழிப்பாக இருப்பதோடு, கடுமையாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காக சில முக்கிய அம்சங்களை வலியுறுத்த விரும்புகிறேன்.

chief secretary shanmugam letter to district collectors

* எந்த இடத்தில் தொற்று அறிகுறி அதிகமாகத் தென்படுகிறதோ, அந்தப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை மிகவும் கட்டுப்படுத்துங்கள். தொற்று உள்ளோரால் பரப்பப்படுவதற்கு முன்பு அவரை கண்டறிவதற்காக பரிசோதனைகளை தீவிரப்படுத்துங்கள்.

* தொற்று உறுதி செய்யப்பட்டவர், எப்படி அந்த தொற்றை பெற்றார் என்பதை கலெக்டர்கள் தினமும் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு தென்படும் அவசரத்துக்கு ஏற்ப கொரோனா தடுப்பு உத்திகளை மாற்றிக்கொள்ளுங்கள்.

* தொற்று அறிகுறி அதிகம் தென்படும் தெருக்கள், பகுதிகளை 100 சதவீதம் மூடுங்கள். அறிகுறி யாருக்கு இருந்தாலும் ஒருவரை கூட விட்டுவிடாமல் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். காய்ச்சல், இருமல் உள்ளிட்ட ஒன்றிரண்டு அறிகுறி தென்பட்டால்கூட போதுமானது.

* குடிசைப் பகுதிகளில் தொற்று அறிகுறி அதிகம் தெரிந்தால், வீடு வீடாகச் சென்று கண்காணிக்க வேண்டும். தொற்று இருக்கும் குடும்பங்கள், தனிமைப்படுத்துதல் முகாம்களுக்கு மாற்றப்பட வேண்டும். தொற்று ஏற்பட்டவரை தடம் கண்டறிதல், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப திட்டம் வகுத்து செயல்பட வேண்டும்.

* தொற்று அறிகுறி அதிகம் தென்படும் பகுதிகளில் கபசுர குடிநீர் போன்ற இந்திய மருத்துவ முறைகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் மருந்துகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வழங்க வேண்டும்.

* மக்கள் கூடும் சந்தைகளில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முககவசம் அணியாதவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

* மருத்துவமனைகளில் நிலையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க வேண்டும். அங்கு தொற்றில்லா நிலையை உருவாக்க வேண்டும்.

* 3 அல்லது அதற்கு மேலான குடும்பத்தினருக்கு தொற்று இருந்தால், அந்த இடத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றுங்கள்.

* சென்னை, மற்ற மாநிலம், நாடுகளில் இருந்து வருகிறவர்களை பரிசோதனை செய்ய வேண்டும். ‘நெகடிவ்’ (தொற்று இல்லை) என்று முடிவு வந்தாலும் 14 நாட்கள் கண்டிப்பாக வீட்டு தனிமையில் அவர்கள் வைக்கப்பட வேண்டும்.

* கடுமையான தொற்றுள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கும், சுமாரான தொற்றுள்ளவர்கள் கொரோனா சுகாதார மையங்களுக்கும், லேசான அறிகுறியுள்ளவர்கள் மற்ற மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். சீக்கிரமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டால் இறப்பை தவிர்க்கலாம்.

* முதியோர், பிற நோய்க்கு ஆளானவர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு பரிசோதனை செய்து, தொற்று இருந்தால் சீக்கிரம் மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும்.

* மருத்துவமனையில் அனுமதிக்காக யாருமே காத்திருக்கக்கூடாது. அங்கு ஆக்சிஜன், படுக்கை வசதி எப்போதும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மூத்த டாக்டர், ஐ.சி.யு. நிபுணர்கள் ஆகியோர் குழுவாக செயல்பட்டு, சிக்கலான நோயாளிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

* நோயாளிகளுக்கு இடம் கிடைக்கும் வகையில், அறிகுறி இல்லாத நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து மையங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும். தடுப்பு முறைகளை விளம்பரப்படுத்துங்கள்.

* மாவட்டத்தில் உள்ள நிலைக்கு ஏற்ப தடுப்பு முறைகளை வரையறுத்துக் கொண்டு கொரோனாவை எதிர்த்து முழுமையாக போராடுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios