10 நாட்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் என முதல்வர் கூறியிருந்த நிலையில் 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை அவசர ஆலோசனை நடத்த உள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை சென்னையில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை தமிழகத்தில் 1,56, 389 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,236 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் 10 நாட்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் என கூறியிருந்தார். 

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியாளர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் மதுரை, தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட15 மாவட்ட ஆட்சியார்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்த உள்ளார். 

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாதிப்பு அதிமுள்ள பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிது. ஆனால், முழு ஊரடங்கிற்கு இனி வாய்ப்பில்லை என்று முதல்வரும் அமைச்சர்களும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,