கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மதத் தலைவர்களோடு சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை தாக்கத்தின் போது அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டு, பின்னர் வைரஸ் தாக்கம் குறைந்த பின்னர் படிப்படியாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் அலை தாக்கத்தில் வழிபாட்டு தலங்களில் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்களின் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே திட்டமிட்ட திருவிழாக்கள்/ குடமுழுக்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக குடமுழுக்கு மற்றும் திருவிழாக்கள் நடத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயில், தேவாலயம், மசூதிகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மதத் தலைவர்களோடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ள மதத் தலைவர்களிடம். 

தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வரும் பக்தர்களை வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க கூடாது.பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும், நுழைவுவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும், பக்தர்கள் கை, கால்களை சுத்தம் செய்த பிறகு உள்ளே நுழைவதை உறுதி செய்ய வேண்டும். நோய் அறிகுறி இல்லாத பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்,வழிபாட்டு தலங்களில் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும், பக்தர்கள் வரிசையில் நிற்கும் வகையில் வட்டமிட வேண்டும், உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும்  தனித்தனி வாயில்களை பயன்படுத்த வேண்டும். 

சாமி சிலைகளை தொட பக்தர்களுக்கு அனுமதிக்க கூடாது பஜனை குழு, பக்தி இசைக்குழுக்களை அனுமதிக்க கூடாது. வழிபாட்டு தலங்களின் தரைப்பகுதியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது. இவை தவிர கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் வழிபாட்டு தளங்களில் வழிபாட்டு நேரங்களை குறைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.