chief minister pazhanisamy meeting with ministers and officers

வடகிழக்குப் பருவமழை தொடங்கும்போதே மிரட்டலுடன் தொடங்கியதை அடுத்து, பருவமழை தீவிரமடைந்தால் எதிர்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியவுடனே கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சென்னையில் மழை குறைந்ததை அடுத்து பல இடங்களில் தண்ணீர் வடிந்து இயல்புநிலை திரும்புகிறது.

எனினும் சென்னை புறநகர்ப் பகுதிகளான முடிச்சூர், துரைப்பாக்கம், சிட்லபாக்கம், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் அதிகமான அளவு தேங்கியுள்ளது. மின்கம்பி அறுந்து விழுந்து சென்னை கொடுங்கையூரில் நேற்று 2 சிறுமிகள் உயிரிழந்தனர். எனவே மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அது தெரியாமல் மிதித்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

ஒருநாள் மழைக்கே சென்னை, நெல்லை ஆகிய நகரங்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இந்த மாதம் மற்றும் டிசம்பரில் பருவமழை தீவிரமடைந்தால் அதிகமான தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், பருவமழை தீவிரமடைந்தால் எதிர்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களும் தலைமை செயலாளர் மற்றும் மற்ற துறை செயலர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

கனமழை பெய்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தால் மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், பாதுகாப்பான மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.