தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை பணிகளும் தடுப்பு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதுடன், அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பிவருகின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் 1885 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1020 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்படுவதால் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் ஊரடங்கால் ஏழை, எளிய மக்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துவருகிறது. 

அந்தவகையில், ஊரடங்கின்போதும் விவசாய பணிகள் மேற்கொள்ளலாம் என தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் விளையவைத்த வேளாண்பொருட்களை அரசு கிடங்குகளிலும் காய்கறிகள், பழங்களை குளிர்சாதன கிடங்குகளிலும் பாதுகாத்து கொள்ளலாம் எனவும் அதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை எனவும் முதல்வர் பழனிசாமி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். 

ஏப்ரல் 30ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த இந்த சலுகையை மே மாத இறுதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. மாம்பழ சீசன் தொடங்கவிருப்பதால் விவசாயிகள் விளையவைக்கும் மாம்பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாத்து வைக்கும் செலவை அரசே ஏற்கும் என்றும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க ஏதுவாக வியாபாரிகளுக்கான ஒரு சதவிகித சந்தை கட்டண ரத்தும் மே மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.