நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி நாளை நேரில் ஆய்வு செய்கிறார்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருகிறது. கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி, அவற்றிலிருந்து அதிகளவிலான நீர் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணை மற்றும் பவானிசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. 

அதனால் மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் காவிரி கரையோர ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

பவானிசாகர் அணையிலிருந்தும் அதிகளவிலான நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ளம் பாதித்த இந்த பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார். வெள்ள நிவாரணம் குறித்து ஈரோட்டில் அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொள்ள உள்ளார்.