சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம்  வரை தமிழகம் முழுவதும் சென்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல்  பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் சேலம் மாவட்டத்தில் உள்ள தனது எடப்பாடி தொகுதியில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்களித்தார். தேர்தல் முடிந்த  பிறகு அங்கேயே சிறிது நாட்கள் தங்கி ஓய்வு எடுத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் காலை சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை  நடத்தினார். அதில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இன்று முதல் தினசரி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு  உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதற்கிடையே, முதல்வருக்கு சில நாட்களாக தீவிர வயிறு வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள்  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிறு பகுதியில் ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

அதில் எடப்பாடிக்கு, குடலிறக்க நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்தான் அவர் வயிறு வலியால் கஷ்டப்படுவது தெரியவந்தது.  உடனடியாக சிகிச்சை அளித்தால் குடலிறக்கத்தை சரி செய்ய முடியும் என்றும், வயிறு வலியும் சரியாகி விடும் என்றும் டாக்டர்கள் ஆலோசனை  வழங்கினர். இதற்கு முதல்வர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சென்று  உள்நோயாளியாக சேர்ந்தார். அவருக்கு டாக்டர்கள் நேற்று வயிறு பகுதியில் ஆபரேஷன் செய்து லேப்ராஸ்கோபி சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ள நிலையில் வீட்டில் முதல்வர் பழனிசாமி மூன்று நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு அவர் முழு ஓய்வில் இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.