மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.41.40 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு ...!
மருத்துவ உபகரணங்களை வாங்க மேலும் 41.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றை தடுக்க போராடும் தமிழக அரசுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த படி அவ்வப்போது கொரோனா நன்கொடை வசூல் குறித்தும், அதன் செலவின விவரங்கள் குறித்தும் அறிவித்து வருகிறது. அதன் படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை நன்கொடையாக 186.15 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. பொது நிவாரண நிதியில் இருந்து ஏற்கனவே இரண்டு கட்டமாக தலா 50 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்த நிலையில், முதற்கட்டமாக ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும் 50 கோடி ரூபாயை வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. எனவே இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை இரண்டாவது கட்டமாக ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை, சிங்கப்பூர் மற்றும் பிற வெளி நாடுகளில் இருந்து வாங்க 41.40 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.