அதிமுக நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செய்திகள் புறக்கணிக்கப்படவில்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பொது செயலாளரான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கிலும், டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிலும் சிறை சென்றனர்.

பிளவு பட்ட அதிமுக அணிகளை இணைப்பதற்கான முயற்சியில், சசிகலா மற்றும் டிடிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், டிடிவி தினகரன் ஜாமினில் வெளி வந்து மீண்டும் கட்சி பணியில் ஈடுபடப் போவதாக கூறினார்.

சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைக்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதனால், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். 

எடப்பாடி பழனிசாமி, ஆட்சியைப் பார்த்துக்கொள்ளட்டும்; தினகரன் கட்சியை வழி நடத்தட்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்
கூறி வந்தனர். 

இந்த நிலையில், அதிமுக நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் குறித்த செய்திகள் திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. 

இது தொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் முதலமைச்சரின் செய்திகள் புறக்கணிக்கப்படவில்லை என்றார். 

தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ள நடிகர் கமல் ஹாசன் குறித்த செய்தியாளர் கேள்விக்கு, கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் கமலின் நிகழ்ச்சி இல்லை என்று கூறினார். மேலும் நடிகர் கமல் ஹாசனை விளம்பரத்துக்காக எதிர்த்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணைக்கு தயார் என்று கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனையைப்போல் நாங்களும் விசாரணைக்குத் தயார் என்றார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பாஜக ஆதரவு கோரினால் அதனை டிடிவி தினகரன் முடிவு செய்வார் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.