கொரோனாவின் தீவிரம் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 800ஐ நெருங்கிவிட்டது. பலி எண்ணிக்கை 18ஆக உள்ளது. 

மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் எல்லாம் கொரோனா பாதிப்பு 200ஐ நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில், தமிழக அரசும் சுகாதாரத்துறையும் மேற்கொண்ட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனாவின் தாக்கம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக உள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்று மக்களின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகள், மருத்துவர்கள் களத்தில் இறங்கி பணியாற்றி கொண்டுள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, கொரோனாவை கண்டெல்லாம் அஞ்சாமல், நேரடியாக டி.எம்.எஸ்-ல் கொரோனா சிகிச்சை குறித்த பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓமந்தூரர் அரசு பொது மருத்துவமனை மற்றும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கொரோனா சிகிச்சைக்காக் 15 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலேயே இருப்பதாக தெரிவித்த முதல்வர் பழனிசாமி, மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதன்மூலம் தான் கொரோனாவிலிருந்து மீள முடியும் என்பதால், மக்கள் வீட்டில் தனிமைப்பட வேண்டும் என்று மறுபடியும் கேட்டுக்கொண்டார்.