தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவுக்கு ‘தில் இருக்கா, திராணி இருக்கா' என ஸ்டாலின் கேள்வி எழுப்புவார். அதே கேள்வியை நாங்கள் இப்போது அவருக்கு எழுப்புகிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய  தேதிகளில் நடைபெறும் என்று மாநில  தேர்தல் ஆணையம் புதிய அட்டவணையை வெளியிட்டது. இந்த அட்டவணை வெளியான சற்று நேரத்தில், “உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 இந்நிலையில் கோவைக்கு வந்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஸ்டாலினின் அறிக்கை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது என்பதை மு.க. ஸ்டாலின் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து, அதன் தீர்ப்பின் அடிப்படையில்தான் மாநில தேர்தல் ஆணையம் தற்போது தேர்தலை அறிவித்திருக்கிறது.தேர்தலை தள்ளிப்போட வேண்டும் என்பது மட்டுமே திமுகவின் நோக்கமாக உள்ளது.


மக்களிடம் விஷமத்தனமான தகவலை பரப்பி அரசியல் ஆதாயம் தேட மு.க. ஸ்டாலின் நினைக்கிறார். 2016ம் ஆண்டில் செய்ததுபோலவே இப்போதும் செய்ய ஸ்டாலின் முயற்சி செய்கிறார். திமுக தேர்தலைக் கண்டு அஞ்சுகிறது; தயங்குகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற மு.க. ஸ்டாலின், மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்கிறார். ஒவ்வொரு முறையும் ஊடகத்தினரை சந்திக்கும் போதெல்லாம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுகவுக்கு தில் உள்ளதா, திராணி உள்ளதா என ஸ்டாலின் கேள்வி எழுப்புவார். அதே கேள்வியை நாங்கள் இப்போது அவருக்கு எழுப்புகிறோம். அதிமுக கூட்டணி ஒன்றாக இருந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும். தேர்தலில் அமோக வெற்றியை அதிமுக பெறும்.” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.