ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சரும் , காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம்  தரப்பினர் மேல் முறையீடு செய்தனர்.

மனுவை பட்டியலிடாமல் விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு நாளை மறுநாள்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. 

சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முயற்சித்து வரும் நிலையில் அவர் தலைமறைவானார் என செய்திகள் வெளி வந்தன. இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு ப.சிதம்பரம்  வருகை தந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

பின்னர் அவர் ஜோன் பாக் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கபில்சிபல், அபிஷேக் சிங்வி போன்ற வழக்கறிஞர்களுடன் சென்றார். அவர் அங்கு இருப்பதை அறிந்த 15 க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள்  அந்த வீட்டின் சுவர்ஏறி குதித்து உள்ளே சென்றனர். இதனால் அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்வதற்காக காத்திருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.