ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்த  ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து  அவர் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகின. இதையடுத்து நேற்றிலிருந்தே அவர் தலைமறைவாகிவிட்டார். சிபிஐயும் அமலாக்கத்துறையும் இவ்விஷயத்தில் கோட்டைவிட்டுவிட்டதாக மத்திய அரசு கருதுகிறது.

இன்று காலை உச்ச நீதிமன்றம் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டது. கபில் சிபல், சல்மான் குர்ஷித், அபிஷேக் சிங்வி போன்ற திறமை வாய்ந்த வழக்கறிஞர்களே உச்ச நீதிமன்றத்தில் போராடியும் தலைமை நீதிபதி மனுவை விசாரணைக்கு ஏற்கவில்லை. இதையடுத்து  இன்றிரவோ,  நாளையோ சிதம்பரம் கைதாகிவிடுவார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

தொடர்ந்து பாஜகவை சிதம்பரம் விமர்சித்து வருவதால் கடுப்பான அக்கட்சி அவரை உள்ளே தள்ள பெரு முயற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. சிபிஐயின் இந்த நடவடிக்கையை பாஜக ஒரு பக்கம் ரசித்துக் கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் இதை திமுக தொண்டர்கள் மனதுக்குள்ளே கொண்டாடி வருகின்றனர். ஒரு வேளை சிதம்பரம் கைது செய்யப்பட்டால் திமுகவினர் அதை பட்டாசு வெடித்துக் கொண்டாடும் மனநிலையில்தான் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திமுக அமைச்சராக இருந்த ஆ.ராசாவுக்கு காங்கிரஸ் கட்சியும் சிதம்பரமும் என்ன செய்தார்களோ அதையே இன்று சிதம்பரத்துக்கு பாஜக செய்கிறது.  திமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல், கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் ஆ,ராசா குடும்பத்தினரும் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில்  2ஜி ஊழல் புகாருக்கு பின்புலமாக இருந்தது இந்த சிதம்பரம்தான். ஆ.ராசாவை ராஜினாமா செய்ய வைத்தது, பின்னர் அவரை கைது செய்தது, அதுமட்டுமல்லாமல் கருணாநிதி மகள் கனிமொழியை சிறையில் அடைத்தது என அனைத்து நடவடிக்கைளுக்கும்  பின்னணியாக இருந்தவரே சிதம்பரம்தான் என்று கருணாநிதி குடும்பம் இன்றுவரை  காண்டில்தான் இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலின்போது அறிவாலயத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே, அதே வளாகத்தில் இருக்கும் கலைஞர் டிவியில் ரெய்டு நடத்தி தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தியது சிபிஐ. இதன் பின்னணியாகவும் சிதம்பரம் செயல்பட்டிருக்கிறார்.

இது குறித்து  சிதம்பரத்திடம் திமுக தலைமை உதவி கேட்டபோது, ‘இது கட்சி, அது ஆட்சி’ என்று வடிவேலு பாணியில் சொல்லிச் சிரிக்க திமுக கொதித்துப் போய்விட்டது. இன்றுவரை இந்த சம்பவத்தை திமுக மறக்கவில்லை. எது , எப்படியோ சிதம்பரம் கைது செய்யப்பட்டால் அதிக மகிழ்ச்சி அடைவது திமுகதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.