ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்று முடிவடைந்தது. இதனையடுத்து அவர் சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரம் சாட்சிகளை கலைக்கவும் , ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், தொடர்புடைய ஆவணங்கள், ஆதாரங்களை திரட்ட சிபிஐ அதிகாரிகள் இங்கிலாந்து, பெர்முடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர். 
இந்த வழக்கில், பொருளாதார குற்றங்கள் நடந்துள்ளன. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரிக்காத வரை, போலீஸ் காவல் அல்லது நீதிமன்ற காவல் மட்டுமே ஒரே வழி என்றார்.

இதையடுத்து சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல் , சிதம்பரத்திடம் விசாரணை தொடர்கிறது. சாட்சிகளை கலைக்கவில்லை. எனவே, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கூடாது. ஆதாரத்தை கலைத்துவிடுவார் என்ற குற்றச்சாட்டிற்கு சிபிஐ ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. 

சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. நீதிமன்ற காவலுக்கு அனுப்பினால், அது அவரை தொல்லைக்கு உட்படுத்துவதாகும். அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் சரண் அடைய தயாராக உள்ளார். வேண்டும் என்றால், சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யட்டும். நீதிமன்ற காவலுக்கான காரணத்தை சிபிஐ முன் வைக்க வேண்டும். சிபிஐ அதிகாரிகள் 15 நாள் விசாரணை நடத்தினர். என வாதிட்டார்.


இதனை விசாரித்த பின்னர் நீதிபதி, வரும் 19ம் தேதி வரை சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதுடன், திஹார் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, திஹார் சிறையில் படுக்கை, மேற்கத்திய கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று கொண்ட கோர்ட், சிதம்பரத்திற்கு திஹார் சிறையில் தனி அறை வழங்கவும், பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து  திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்ட சிதம்பரம், பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறை 7ல் அடைக்கப்பட்டார். அவருக்கு உணவாக சப்பாத்தி, பருப்பு, கூட்டு வழங்கப்படும் என திஹார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கோர்ட் உத்தரவுப்படி, மேற்கத்திய கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 16 ஆம் தேதி சிதம்பரத்துக்கு பிறந்த நாள் வருகிறது. அவரது பிறந்த நாள் சிறைக்கள் தான் என்கின்றனர் காங்கிரஸ்காரர்கள்.