ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி நாளைக்கு விசாரிப்பதாக அறிவித்தார்.

இதனால் சுறுசுறுப்படைந்த  சிபிஐ தரப்பு சிதம்பரத்தைக் கைது செய்ய முனைப்பு காட்டியது. இதையடுத்து சிதம்பரம் மலைமறைவானார். ஆனால் நேற்று இரவு டெல்லி காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்த சிதம்பரம் தான் ஓடி ஒளியவில்லை என்றும், வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வீட்டுக் சென்ற சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செயது அழைத்துச் சென்றனர். சிதம்பரம் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன் 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், சென்னையை அடுத்த மறைமலை நகர் ரயில்வே நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில் ஜி.கே.மூப்பனார் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரமும் கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் கைது  செய்ய அன்றைய திமுக அரசு உத்தரவிட்டது. அதன்படி மாலை அனைவரும் கைது செய்யப்பட்டனர். 
அனைவரும் சென்ட்ரல் சிறையில் அடைக்கப்பட்டனர். மறுநாள் காலையே அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதுதான் ப.சிதம்பரத்தின் முதல் கைது.

அதன்பின் பல ஆண்டுகள் காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவு ஆட்சிகளே மத்தியில் இருந்ததால் ப.சிதம்பரம் பெரிய அளவு போராட்டங்களில் கலந்துகொண்டதில்லை.  இந்நிலையில் தற்போது சிதம்பரம் 30 ஆண்டுகள் கழித்து ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.