சேலம் - சென்னை  இடையேயான 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததை தங்களுடைய சாதனையாக பாமக சொல்லிவரும் நிலையில், இந்தப் பசுமை வழிச் சாலை நிறைவேற்றப்படும் என்று மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி உறுதிபட கூறியுள்ளார்.
சேலத்தில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றார்கள். 
இந்தக் கூட்டத்தில் பேசி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது. பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது, “ நான் தற்போது நீர் வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறேன். எனவே நீரைப் பெறுவதன் அவசியம் தெரியும். இந்தியாவின் பல மாநிலங்களில் நநி நீர் பிரச்னை உள்ளது. தண்ணீர் அதிகமாக உள்ள மாநிலத்திலிருந்து தண்ணீர்ப் பற்றாக்குறையாக உள்ள மாநிலங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்வதைப் பற்றி ஆலோசித்துகொண்டிருக்கிறோம். அதை தமிழகத்தில் முதலில் அமல்படுத்துவோம்.
சேலம் - சென்னை இடையேயான 8 வழி சாலை இந்தப் பகுதியின் முன்னேற்றத்துக்கு முக்கியமானது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்குவோம். விவசாயிகளுடன் கலந்து பேசி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம். தமிழக முதல்வர் இந்தத் திட்டத்தில் மிகவும் அக்கறைக் காட்டி வருகிறார். எனவே பசுமை வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும்” என்றார்.


இந்தத் திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இதுதொடர்பாக மேல் முறையீடு செய்யப்படுமா என்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், நீதிமன்றம் தடை விதித்ததற்கு பாமகதான் காரணம் என்று அக்கட்சி உரிமை கொண்டாடி மகிழ்ந்துவருகிறது. இந்நிலையில் இந்த இரு கட்சிகளிடன் கூட்டணி கட்சியான பாஜக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதுவும் பாமக நிறுவனர் ராமதாஸை வைத்துக்கொண்டே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்ததுதான் ஹைலைட்!