தமிழகத்தை தட்ஷிண பிரதேஷ் என்று பெயர் மாற்றம் செய்யவும், சென்னையைத் தனி யூனியன் பிரதேசமாக மாற்றி தங்கள் ஆளுமையின் கீழ் வைத்துக்கொள்ளவும் பாஜக நினைப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலத்தில் நடந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசுகையில், “இந்தத் தேர்தல் சனாதனத்துக்கும் ஜனநாயகத்துக்கும் நடக்கும் ஒரு கருத்தியல் போர். தமிழ் நாடு தற்போது ஓர் ஆபத்தான சூழலில் சிக்கியிருக்கிறது. மோசமான ஆபத்தான கொள்கை உள்ளவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் ஆபத்து சூழ்ந்துள்ளது. அதை எதிர்த்துதான் முற்போக்கு ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள் இணைந்து களத்தில் நிற்கிறோம். இது தேர்தல் நேரத்தில் உருவான கூட்டணி அல்ல. 5 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆபத்தையெல்லாம் முன்கூட்டியே கணித்து இந்தக் கூட்டணியைக் கட்டி ஸ்டாலின் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

எதிரணியில் நிற்பவர்கள் கொள்கை அடிப்படையிலான கூட்டணி அல்ல. பேரம் பேசி சந்தர்ப்பவாத அடிப்படையில் கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் வாசல் கதவைத் திறந்து வைப்போம், யாரிடமும் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் என்ற நிலையில் உருவாக்கப்பட்டதல்ல திமுக கூட்டணி. எங்களுடைய ஒரே நோக்கம் ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமல்ல. பிற்போக்கு சக்திகளிடம் இந்த மண் சென்றுவிடக் கூடாது. சாதி வெறி, மதவெறி கூட்டத்தால் பாழ்பட்டுவிடக் கூடாது. அதற்காக ஸ்டாலினால் உருவாக்கப்பட்டதுதான் இந்த மதச்சார்பற்ற கூட்டணி.
இன்று கருணாநிதி இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. எனவே, இதைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக நினைக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் மதவெறியைத் தூண்டிவிட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, அதிமுக, பாமக முதுகில் சவாரி செய்து தமிழகம், புதுவையில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்கிற கனவில் பாஜக உள்ளது. அதிமுக நீர்த்துப்போய்விட்டது. பாமக விலை போய்விட்டது. தமிழக மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் பாஜக - திமுக கூட்டணிக்கு இடையேதான் போட்டி.
பாஜகவின் தேர்தல் அறிக்கையிலே தமிழகத்தை தட்ஷிண பிரதேஷ் என்று பெயர் சூட்டப்போவதாகத் தெரிவித்துள்ளனர். இந்நாட்டின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட அண்ணா எடுத்த முயற்சி, சங்கரலிங்கனார் எடுத்த முயற்சி, அவருடைய போராட்டம் எல்லாம் வரலாறாக உள்ளது. இவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்க முயல்கின்றன. தமிழகத்தை தட்ஷிண பிரதேஷ் என்று பெயர் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளனர். சென்னையைத் தனி யூனியன் பிரதேசமாக மாற்றி தங்கள் ஆளுமையின் கீழ் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். இவற்றையெல்லாம் மாற்றக்கூடிய சக்தி திமுக கூட்டணிக்கு உண்டு” என்று திருமாவளவன் பேசினார்.
