சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு துன்புறுத்தலுக்கு அளாக்கப்படுவதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய உறுப்பினர் சிவராஜ் வித்வான் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.   சென்னை ஐஐடியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொண்டார்.  இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து  தமிழக போலீசார் அதுதொடர்பாக விசாரணை  நடத்தி வருகின்றனர். 

அதே நேரத்தில் இதுவரையில்  ஐஐடியில் நடந்துள்ள  மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென குரல் வலுத்துவருகிறது.   இந்நிலையில் பாத்திமாவின் மரணம் குறித்து விசாரிக்க தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் முடிவு செய்தது,  இதனையடுத்து அந்த ஆணையத்தின் உறுப்பினர் சுவராஜ் வித்வான் நேரில் ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மற்ற மாநில ஐஐடிக்களை விட சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக உள்ளது என்றார்.  2007 முதல் 2011 ஆம் ஆண்டு வரை 17 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  

ஆனால் அதற்கான முழு காரணம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.  சென்னை ஐஐடியில் இதுவரை இட ஒதுக்கீட்டு முறை முழுமையாக பின்பற்றப்படவில்லை என கூறிய அவர்,  2322 முதுநிலை அறிவியல் இடங்களில் இதுவரையில் 47 எஸ்சி மற்றும் 6 எஸ்டி பிரிவு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளார்.

 

 தாழ்த்தப்பட்ட பிரிவினர் மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சென்னை ஐஐடியில் துன்புறுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார் .  இதனை பிரதமர் மோடி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் தெரிவிக்க உள்ளதாகவும் இதுதொடர்பாக சென்னை ஐஐடி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும்  சுவராஜ் வித்வான் தெரிவித்தார்.