கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்திக்கு சரியான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கில், 4 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது உடல், கோபாலபுரம், சிஐடி காலனி இல்லங்களில் உறவினர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பிறகு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆகஸ்ட் 8ம் தேதி அதிகாலையில் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. 

ராஜாஜி ஹாலில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்திக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதுதொடர்பாக வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது.