அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சட்டமன்றத்தில் குட்டிக் கதை சொல்லி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாராட்டை பெற்றார்.  

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு கதையை சொன்னார். ’ஒரு அப்பா மகளுக்கு வரன் பார்த்தார். எந்த ஜாதகமும் பெண்ணுக்கு பொருந்தவில்லை. இந்நிலையில் தரகர் ஒரு ஜாதகத்தை கொண்டு வந்தார். அந்த வரனில் 10-ல் எட்டு பொருத்தம் நன்றாக உள்ளது. எட்டு பொருத்தம் உள்ளதே, இதுவே நல்ல ஜாதகம்தான் என பெண்ணின் தந்தை முடிவு செய்தார். பெண்ணும் அந்த ஆண்மகனை மணக்கச் சம்மதித்தார். திருமண ஏற்பாடு களைகட்டிது. மணமேடையில் மணமக்கள் அமர்ந்துள்ளனர். புரோகிதர் மந்திரம் சொல்கிறார். யாக குண்டத்தில் போடுவதற்காக பொரியை மாப்பிள்ளையிடம் கொடுத்தார் புரோகிதர். பொரி சாப்பிடுவதற்கு கொடுக்கிறார் என நினைத்த மாப்பிள்ளை அதனை தன் வாயில் போட்டார். 

உடனே புரோகிதர் ’அட அபிஷ்டு...அபிஷ்டு...’ பொரியை யாக குண்டத்தில் போட கொடுத்தால் வாயில் போட்டு மெல்லுகிறாயே என்றார். சரி என அதனை ஏற்றுக்கொண்ட மாப்பிள்ளை வாயில் போட்ட பொரியை யாக குண்டத்தில் துப்ப, உடனே கடிந்துகொண்டார் புரோகிதர். 

இறுதியகத் தாலியை எடுத்து கட்டச் சொல்லி மாப்பிள்ளையிடம் கொடுத்தார். உடனே மாப்பிள்ளை ‘நான் எது செய்தாலும் நீங்கள் தவறு என்கிறீர்கள். ஆகவே தாலியை நீங்களே கட்டிவிடுங்கள்’ எனக் கூற மண்டபமே அதிர்ச்சியில் உறைந்தது. பெண்ணின் தந்தையிடம் வந்த தரகர், மாப்பிள்ளைக்கு சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. இவைதான் குறைபட்ட இந்த இரு பொருத்தங்கள் என்றார். உடனே பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தினார். 

இந்த கதையை கூறி முடித்த செல்லூர் ராஜு ‘இந்த கதையில் வரும் மாப்பிள்ளை போலத்தான் சிலருக்கு மணமேடை வாய்க்கும். மணப் பொருத்தம் வாய்க்கும். ஆனால் திருமணம் ஆகாது’ என மறைமுகமாக ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர முடியாது என்பதை கதை மூலம் முடித்தார். இதனையடுத்து ஆவேசம் அடைந்த திமுகவினர் வழக்கம்போல பெஞ்சை தட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ’திருமணத்தில் 10 பொருத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் மாப்பிள்ளை செத்துவிடுவான்’ என்றார் துரைமுருகன். ’எப்படியும் உங்கள் கட்சி ஜாகத்தை நம்பப் போவதில்லை. பிறகு ஏன் அதுகுறித்து பேசுகிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பிய முதல்வர் பழனிசாமி, நகைச்சுவை கதை சொன்ன செல்லூர் ராஜுவை பாராட்டினார்.

 

'ஜாதகம் எங்கள்ளுக்குப் பார்க்கவில்லை, உங்களுக்குத்தான் பார்க்கிறோம்’ என்றார் துரைமுருகன். எங்களுக்கு ஜாதகம் நன்றாக இருப்பதால்தான் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். உங்களைப்போல் மேலேயும் இல்லாமல் கீழேயும் இல்லாமல் நடுவில் தொங்கிக்கொண்டு இருக்கவில்லை என ஃபினிஷிங் பஞ்ச் கொடுத்தார் முதல்வர் பழனிசாமி.