இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் மார்ச் 15-ல் விசாரணைக்கு வருகிறது. இதனால்  மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவோ என்ற அச்சத்தில் அதிமுகவினர் இருந்து வருகின்றனர். 

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இரண்டாக உடைந்த அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு மொத்தமாக கழட்டிவிடப்பட்டது. இதையடுத்து சசிகலா - தினகரன் தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதனால் தேர்தல் ஆணையம் அதிரடியாக இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. 

இதனால் தற்காலிகமாக தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னம் கிடைத்தது. ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்கு மின் கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதன் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர் தீர்ப்பில் இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்குதான் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பில் இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என நீதிபதிகள் கூறினர். மேலும் தினகரன் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இரட்டை இலை சின்னம் தொடர்பான டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் மார்ச் 15-ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின் போது மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு  மீண்டும் தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி முறையிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.