அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம்..! முதல்வர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!
சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில் அமைச்சரவை மாற்றம் வேண்டாம் என்று கருதியதால் அந்த யோசனையை முதல்வர் தள்ளி வைத்ததாக சொல்கிறார்கள். இந்த நிலையில் சட்டப்பேரவை முடிந்த நிலையில், அமைச்சர்கள் சிலரின் செயல்பாடு கடந்த காலங்களை விட மேம்பட்டிருப்பது ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்வது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
அமைச்சர்களில் சிலர் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லை என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறுகிய காலத்தில் அமைச்சர்களை மாற்றினால் அது தான் எடுத்த முடிவே தவறு என்கிற தோற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் நிர்வாக வசதிக்காக அமைச்சர்கள் சிலர் வைத்திருக்கும் இலாக்காக்களை மட்டும் மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த உடன் அமைச்சர்கள் அனைவருக்கும் 100 நாட்களில் செய்ய வேண்டிய டார்கெட் பிக்ஸ் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த டார்கெட்டை எந்தந்த அமைச்சர்கள் அச்சீவ் செய்துள்ளனர். எந்தெந்த அமைச்சர்கள் பெரும்பாலும் முடித்துள்ளனர், யார் யார் பாதி முடித்துள்ளனர், எந்தெந்த அமைச்சர்கள் டார்கெட்டை பற்றி கவலையே படாமல் பணியாற்றியுள்ளனர் என்கிற அறிக்கையை கடந்த மாதமே முதல்வரிடம் உளவுத்துறை கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்ய முதல்வர் பரிசீலித்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்டப்பட்டது.
சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில் அமைச்சரவை மாற்றம் வேண்டாம் என்று கருதியதால் அந்த யோசனையை முதல்வர் தள்ளி வைத்ததாக சொல்கிறார்கள். இந்த நிலையில் சட்டப்பேரவை முடிந்த நிலையில், அமைச்சர்கள் சிலரின் செயல்பாடு கடந்த காலங்களை விட மேம்பட்டிருப்பது ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதே சமயம் சில அமைச்சர்கள் தொடர்ந்து திக்கு தெரியாமல் பணியாற்றி வருவதையும் முதல்வர் கண்காணித்து வருகிறார். எனவே முக்கியமான இலாக்காக்களை வைத்திருக்கும் சில அமைச்சர்களின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் சிறப்பாக செயல்படும் ஜூனியர் அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
அதன்படி அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன், மனோ தங்கராஜ் போன்றோருக்கு கூடுதல் இலாக்காக்கள் அல்லது புதிய இலாக்காக்கள் கொடுக்கப்படும் என்கிறார்கள். இதேபோல் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பெரியகருப்பன் போன்றோர் கூடுதல் இலாக்காக்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கும் சில வளமான இலாக்காக்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் சில மாவட்டங்களில் தற்போது வரை அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாமலேயே இருக்கிறது. உதாரணமாக காவிரி டெல்டா மாவட்டத்தில் ஒட்டு மொத்த தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. ஆனால் தஞ்சை, நாகை, திருவாரூரில் திமுகவிற்கு ஒரு அமைச்சர் கூட இல்லை. இதே போல் வேறு சில முக்கியமான மற்றும் பெரிய மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இல்லாத கட்சிப்பணிகளை பாதித்துள்ளது. எனவே அங்கிருந்து புதிய அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தையும் கடந்த ஒரு வார காலமாகவே முதலமைச்சர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.