change eps and ops ruling from TN

தமிழகத்தில் பாஜகவுக்கு அடிமை வேலை செய்யும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் அகற்றிவிட்டு மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் அ.ம.மு.க. சார்பில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கரூர் வந்துள்ளார்.

முன்னதாக வரும் வழியில் தவுட்டுப்பாளையம், பஞ்சை புகளூர், வெங்கமேடு ஆகிய இடங்களில், முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் கட்சியினர் தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ஸ்டெர்லைட், நீட், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்கள் எதிர்க்கும் திட்டங்களை கொண்டு வரமாட்டோம் என்று உறுதியளிப்பவர்களே மத்தியில் இனி ஆட்சி அமைக்க முடியும் என தெரிவித்தார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என கூறினார்.

தமிழகத்தில் தற்போது நடப்பது மக்கள் விரோத ஆட்சி, அடிமைகளின் ஆட்சி, இந்த ஆட்சி எல்லாவற்றையும் பணத்தால் சாதிக்கலாம் என்று எண்ணுகிறது என குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பேசிய தினா, கடந்த மாதம் கரூரில் காவிரி பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளாக வந்து போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி என்னை அனுப்பி வைத்தீர்கள்.

இப்போது மீண்டும் கரூர் வந்துள்ளேன். தமிழகத்தில் மக்கள் விரும்பாத, துரோக ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆதரியுங்கள் என தெரிவித்தார்.