காங்கிரஸுடன் கைகோர்த்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் பதவி மீதும் மோகம் எனக் கூறப்பட்ட நிலையில் அதை தெளிவு படுத்திவிட்டு, மற்றொரு குழப்பத்தை கொளுத்திப்போட்டிருக்கிறார். இது ராகுல் காந்தியை எரிச்சலடைய வைத்துள்ளது.

ஜனவரி, 6ம் தேதி ஆந்திர  மாநிலம் குண்டூரில் நடக்கும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி. அவரது வருகைக்கு எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார் சந்திரபாபு நாயுடு. இதற்காக அனந்தபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய அவர், ’’ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து பெற பிரதமர் மோடியை 29 முறை சந்தித்து பேசியும் இதுவரை சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை. குஜராத்தை விட ஆந்திரா முன்னேறி விடக்கூடாது என்று நினைக்கிறார். ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் பிரதமர் மோடி எந்த முகத்தை வைத்துக் கொண்டு இங்கு வருகிறார். நாங்கள் உயிருடன் இருக்கிறோமா, இல்லையா என்பதை  பார்க்க வருகிறாரா அல்லது எங்களின் பிரச்னைகளை பார்த்து சிரிக்க வருகிறாரா? ஆந்திரா மறுசீரமைப்பு சட்டத்தை அமல்படுத்தினால் மோடி இங்கு வருவதில் எங்களுக்கு எந்த ஆட்பேசனையும் இல்லை.

எனக்கு பிரதமராக வேண்டும் என்று எந்த குறிக்கோளும் இல்லை, ஆசையும் இல்லை. எனவே பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். மத்தியில் பா.ஜனதா அல்லாத கட்சிகள் கொண்ட கூட்டணிதான் ஆட்சிக்கு வரும். அது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியாகவும் இருக்கலாம் அல்லது காங்கிரஸ் ஆதரிக்கும் கூட்டணியாகவும் இருக்கலாம். பா.ஜனதாவால் இனி தனித்து ஆட்சி அமைக்க முடியாது. அதற்கான வாய்ப்பு இல்லை. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்கள் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான அரை இறுதிப் போட்டி. தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்தால் பா.ஜனதா வெற்றி  பெற முடியாது’’ என அவர் தெரிவித்தார்.

அடுத்து அமையப்போவது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியாகவும் இருக்கலாம் அல்லது காங்கிரஸ் ஆதரிக்கும் கூட்டணியாகவும் இருக்கலாம் என அவர் கூறியுள்ளது காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வதாக கருத்துத் தெரிவித்திருந்த நிலையில் அதனை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சந்திரபாபு நாயுடுவும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்,.