ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய பாஜக மறுத்த காரணத்தால், பாஜகவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் கட்சி முறித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தீர்மானித்துள்ளது. ஏற்கனவே ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் அளித்துள்ளது. 

பாஜகவுடனான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய பின்னர், இதுதொடர்பாக ஆந்திர சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று முடிவு எடுத்தேன். இதில் எனது தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் இல்லை. ஆந்திர மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சிகளை கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தேன். இதுதொடர்பாக இதுவரை 29 முறை டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசியுள்ளேன். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

மத்திய பாஜக அரசின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் இதுதான் என்பதால், இதில் ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்பான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாத சூழ்நிலையில்தான் நாங்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினோம் என சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.