பெங்களூரு சிறையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருவது குறித்து கடந்த ஏப்ரல் மாதமே மத்திய அரசு அதிகாரிகளுக்கு தெரியும் என்றும், முறையான ஆதாரங்கள் கிடைக்கும் வரை பொறுமையாக காத்திருந்த அவர்களிடம் தற்போது சசிகலா வசமாக சிக்கிக் கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.,

சொத்து குவித்து 4 ஆண்டு தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலா ஜெயிலுக்குள் போய் 5 மாதம் முடிந்துள்ள நிலையில் அவர் லஞ்சம் கொடுத்து ஏராளமான சலுகைகளை அனுபவித்து வந்தது தற்போது அம்பலமாகி உள்ளது.

5 அறைகள் கொண்ட தனி இடம், டி.வி., சொகுசு மெத்தை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அனுபவித்து வந்ததை சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா ஆதாரத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்.இதற்காக சசிகலா தரப்பில் சிறை துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் டி.ஐ.ஜி. ரூபா தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்த முறைகேடான பணப் பரிமாற்றம் கடந்த ஏப்ரல் மாதமே மத்திய அரசுக்கு தெரிந்து விட்டது.

அதன் பிறகுதான் சசிகலா தரப்பில் இருந்து சிறை துறை அதிகாரிகளுக்கு லட்சம் லட்சமாக பணம் கொடுப்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த ஏற்பாடுகள் நடந்தன. அதன்படிதான் தற்போது இந்த விவகாரத்தில் சசிகலா சிக்கியுள்ளார்.

சசிகலா சிக்குவதற்கு கர்நாடக மாநில முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் என்பவர் கொடுத்த வாக்குமூலம்தான் காரணமாக அமைந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெற தலைமை தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனின் நண்பர்களில் ஒருவரான பெங்களூரைச் சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவரையும் டெல்லி போலீசார் விசாரித்தனர்.

இந்த மல்லிகார்ஜுனாவும், பிரகாசும் நண்பர்கள். அந்த வகையில் தினகரன் மூலம் பெங்களூர் சிறை துறை அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதாக மல்லிகார்ஜுனா உளறி கொட்டினார்.

சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்கு ரூ.2 கோடி தினகரன் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதைத் துருப்புச் சீட்டாக பயன்படுத்தித்தான் தற்போது சசிகலாவை மடக்கிப் பிடித்துள்ளனர்.

அப்போதிருந்தே சசிகலாவை கண்காணிக்கத் தொடங்கிய போலீசார் தற்போது மிகச் சரியாக கிடுக்கிப் போட்டு  உண்மையைக்  கண்டு பிடித்தனர்.