central government targets dmk

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பாஜக கொடி பறக்க வேண்டும் என்பதில் அந்த கட்சி உறுதியாக முடிவெடுத்து, செயலாற்ற தொடங்கி விட்டது.

உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட நான்கைந்து வடமாநிலங்களில் மட்டுமே செல்வாக்கோடு திகழ்ந்த பாஜக தற்போது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ந்து வருகிறது.

தென் இந்தியாவை பொறுத்த வரை, கர்நாடகாவில் மட்டுமே காங்கிரசுக்கு மாற்றாக பாஜக உருவெடுத்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அங்கு ஆளும் தரப்புக்கு நட்போடு விளங்குகிறது.

கேரளாவில், காங்கிரசையும், இடது சாரிகளையும் மீறி நுழைவது பாஜகவுக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

தமிழகத்தை பொறுத்த வரை, அதிமுக, திமுக என்ற இரு பெரிய கட்சிகளுக்கு மத்தியில், பாஜக காலூன்றுவது சாத்தியம் இல்லாமலே இருந்தது.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவு, திமுக தலைவர் கலைஞரின் செயலிழப்பு ஆகியவை, கூட்டணி மூலமாவது சில இடங்களை பிடிக்கலாம் என்ற நம்பிக்கையை பாஜக வுக்கு ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக என்பது, உள்ளுக்குள் பல அணிகளாக பிரிந்து இருந்தாலும், பன்னீர் மற்றும் எடப்பாடி அணி என்ற இரண்டே, வெளியில் தெரியும் பெரிய அணிகளாக உள்ளன.

இதில், பாஜக வை எதிர்க்கும் தைரியம் இந்த இரண்டு அணிகளுக்குமே இல்லை. பன்னீருக்கு பின்னால் இருந்து இயங்குவதே, பாஜக தான் என்று பரவலாக பேச்சு உள்ளது.

எடப்பாடியை பொறுத்த வரை, மத்திய அரசுக்கு எதிராக யாரும் கருத்து சொல்ல கூடாது என்று அமைச்சரவை கூட்டத்தில் உத்தரவே போட்டு விட்டார்.

சசிகலா, தினகரன் போன்றவர்களின் சிறை, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரைடு, அமைச்சர் காமராஜ் மீதான வழக்கு பதிவு ஆகிவற்றை கடந்து, மணல் மன்னன் சேகர் ரெட்டியின் டைரியால், முதல்வர் தொடங்கி, அமைச்சர்கள் வரை பாஜக வுக்கு எதிராக பேசுவதற்கு இன்றைய தேதி வரை யாருமே இல்லை.

மறுபக்கம், திமுக சார்பிலும், பாஜகவுக்கு எதிரான விஷயம் அடக்கியே வாசிக்கபடுகிறது. மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகள், கனிமொழி, ராசா மீதான 2 ஜி வழக்குகள் மூலம், திமுகவும் ஒடுக்கப்பட்டு வருவதாகவே தகவல்.

அத்துடன், கட்சியில் அழகிரி, கனிமொழி ஆகிவற்றின் முக்கியத்துவம் அனைத்தும் முழுமையாக குறைக்கப்பட்டு, சர்வ வல்லமை படைத்தவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

அதனால், அழகிரி மற்றும் கனிமொழி மூலம் திமுகவை மூன்றாக உடைக்கும் அசைன்மென்டை ஏற்கனவே தொடங்கி விட்டது பாஜக. தற்போது வரை, அமைதியாக இருக்கும் அழகிரி, திடீரென ஒருநாள் பொங்கி எழுவார், அப்போது அதை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் சிலர்.

தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை பொறுத்த வரை பாஜக பெரிதாக எடுத்து கொள்வதில்லை. ஏனென்றால், கடந்த தேர்தலிலேயே, மற்ற கட்சிகள் அனைத்தும், தங்களது பிரதிநிதித்துவத்தை இழந்து விட்டன. வரப்போகும் தேர்தலில், ஏதாவது ஒரு அணியில் ஒட்டிக்கொள்வதை தவிர அவற்றுக்கு வேறு வழியில்லை.

தமிழ் நாட்டின், முதல் சட்டமன்ற தேர்தல் தொடங்கி 2011 தேர்தல் வரை, குறைந்த பட்ச உறுப்பினர்களையாவது கொண்டிருந்த இடது சாரிகள், கடந்த தேர்தலில், ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை.

வடமாவட்டங்களில் லேசான வேர் பிடிப்புடன் இருக்கும், பாமகவை பலவீனப்படுத்தும் வேலையும் ஏற்கனவே பாஜகவால் தொடங்கப்பட்டு விட்டது. 

ஒரு வேளை, பாமக தமக்கு எதிராக செயல்பட்டால், அன்புமணிக்கு எதிரான வழக்குகளை தீவிரப்படுத்தலாம் என்றும் பாஜக முடிவெடுத்துள்ளது.

எனவே, அதிமுக அசைன்மென்டை வெற்றிகரமாக முடித்துவிட்ட பாஜக, அடுத்த அசைன்மெண்டாக திமுகவை உடைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, குடியரசு தலைவர் தேர்தலுக்கு பின்னர், திமுக உடைவதையும் பார்க்கலாம் என்கின்றனர், டெல்லி வட்டார செய்தியாளர்கள்.