கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவனம் பதஞ்சலி அறிவித்து, விளம்பரம்படுத்தியதை நிறுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகையே உலுக்கிவருகிறது கொரோனா வைரஸ். உலகில் உள்ள எல்லா நாடுகளுமே இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திண்டாடிவருகின்றன. பல நாடுகளும் கொரோனோ வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனோவுக்கு ஆயுர்வேத மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி நிர்வாகம் அறிவித்தது. ‘கொரோனா கிட்’ எனப்படும் அந்த மருந்தை பதஞ்சலி நிறுவனம் இன்று அறிமுகம் செய்தது.


இந்த மருந்தை நோயாளிகளிடம் கொடுத்து பரிசோதனை செய்துள்ளதாகவும் பதஞ்சலி அறிவித்துள்ளது. இந்தச் சோதனையில் 3 நாட்களுக்குள் 69 சதவீத நோயாளிகள் மீட்கப்பட்டனர் என்றும் 7 நாட்களுக்குள் 100 சதவீத பேரும் நோய்தொற்றில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. இதற்கிடையே கொரோனா மருந்து தொடர்பான விளம்பரங்களை நிறுத்தும்படியும் மருந்து தொடர்பான தகவல்களை வழங்கும்படியும் பதஞ்சலி நிறுவனத்துக்கு மத்திய அரசின் ஆயுஷ் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக ஆயுஷ் துறை, “பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரங்கள் ஆட்சபேனைக்குரிய விளம்பர 1954-ம் ஆண்டு சட்டத்துக்கு கட்டுப்பட்டவை” என்று தெரிவித்துள்ளது. மருந்தின் தன்மை, மருந்து சோதனை நடத்தப்பட்டது தகவல், இந்திய மருந்து பரிசோதனைகள் பதிவு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா, மருந்தின் மாதிரி அளவு, ஆய்வு முடிவின் அறிக்கை ஆகியவற்றை அளிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சோதனைகள் எதுவும் முடியாத நிலையில், கொரோனாவுக்கு மருந்து என்ற விளம்பரங்களை நிறுத்தும்படியும் பதஞ்சலி நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.