இல்லாத விதிகளை காரணம் காட்டி எழுவர் விடுதலைக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

இதற்கிடையே மத்திய அரசு விடுதலை செய்த தண்டனைக் கைதிகள் குறித்தும், இதற்காக மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின் நகல்களை வழங்கக் கோரியும் பேரறிவாளன் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தார். இதற்கு தற்போது பதிலளித்துள்ள உள்துறை அமைச்சகம், “குற்றவாளிகளுக்கான தண்டனையை குறைப்பது தொடர்பாகவோ, தண்டனையைக் குறைக்கவிடாமல் மாநில அரசைத் தடுக்கும் வகையிலோ எந்த விதியும் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறது.

 இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (நவம்பர் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்த விவகாரத்தில், உரிய விதிகள் வகுக்கப்படாத நிலையில், இல்லாத விதிகளைக் காரணம் காட்டி அவர்களின் விடுதலைக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வந்தது அம்பலமாகியிருக்கிறது. எந்த அடிப்படையுமே இல்லாமல் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எழுவர் விடுதலையை மத்திய அரசு தாமதப்படுத்தியது” என்று கண்டித்துள்ளார். 

“7 தமிழர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு நடத்திய மோசடியான நாடகங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன” எனக் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், 7 தமிழர்களின் தண்டனைக் குறைப்பு குறித்த பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்றால், அதை சில சட்டங்கள் அல்லது விதிகளின்படி தான் செய்ய முடியும். ஆனால், தண்டனைக் குறைப்பு குறித்த விதிகள் வகுக்கப்படாத நிலையில், மத்திய அரசு எவ்வாறு தண்டனைக் குறைப்பு குறித்த பரிந்துரையை நிராகரிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை ஆகி விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான், விதிகளே இல்லாத சூழலில் தங்கள் விருப்பப்படி அது குறித்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதன் மூலம் 7 தமிழர்கள் விடுதலையை மத்திய அரசு இரு ஆண்டுகள் தாமதப் படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல் ஆகும் எனக் குற்றம் சாட்டியுள்ள ராமதாஸ், இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலும் ஆகும் என்று தெரிவித்திருக்கிறார். 

"28 ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்ய அற்புதமான வாய்ப்பு கிடைத்த நிலையில், மத்திய அரசு சொந்த வெறுப்பு காரணமாக அவர்களின் விடுதலைக்கு எதிராக முடிவெடுத்து சதி செய்திருக்கிறது. இதனால் 7 தமிழர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்புகளை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ள ராமதாஸ், தமிழக அரசின் பரிந்துரை மீது முடிவெடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்வதும் மனித உரிமை மீறலாகும். 7 தமிழர்கள் விடுதலையை தாமதம் செய்ய எந்த நியாயமான காரணங்களும் இல்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் 7 தமிழரையும் விடுவித்து ஆளுநர் ஆணையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.