central government betrayed tamilnadu continuously - velmurugan

விழுப்புரம்

காவிரி பிரச்சனையில் துரோகம் செய்த மத்திய அரசு, தற்போது ‘நீட்’ தேர்விலும் துரோகம் செய்துள்ளது என்று விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் வருகிற 18-ஆம் தேதி மாலை விழுப்புரம் நகராட்சி திடலில் நடக்கிறது. 

இந்தக் கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "காவிரி பிரச்சனையில் துரோகம் செய்த மத்திய அரசு, தற்போது ‘நீட்’ தேர்விலும் துரோகம் செய்துள்ளது. ராஜஸ்தான், கேரளா போன்ற வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்து மாணவ - மாணவிகளை அலைக்கழித்துள்ளது.

இதனைக் கண்டித்து தென்இந்திய சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். இதன் விளைவாக தேர்வு எழுதுபவர்களுக்கு இரயில் கட்டணம் மற்றும் செலவுத்தொகை வழங்குவதாக அரசு அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டோம்.

தற்போது கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு தொடர்ந்து காவிரி பிரச்சனையில் துரோகம் செய்து வருகிறது. இனிமேலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இந்த பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான எங்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும். 

காவிரி நீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனுநீதி நாளன்று விவசாயிகளின் ஆடு, மாடு, டிராக்டர்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.