சென்னையில் நடைபெற்ற விழாவில் நடிகர் ரஜினி மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துகளை பேசியது அரசியல் அரங்கில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தனது தயா அறக்கட்டளை முலமாக பீஸ் ஃபார் சில்ட்ரன் என்கிற விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். குழந்தைகள் கடத்தப்படுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் போன்றவற்றை உடனடியாக தடுக்க வேண்டும், குழந்தைகளை அமைதியாக வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து நடைபெறும் விழா என்பதால் ரஜினி அரசியல் பேசக்கூடும் என்று ஆர்வத்துடன் செய்தியாளர்கள் திரண்டிருந்தனர். அதே சமயம் ரஜினி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்றும் தகவல்கள் உலவின. ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் ரஜினி நிகழ்ச்சியில் பங்கேற்றா. ஆனால் ரஜினி வழக்கமான உற்சாகத்துடன் இல்லை. அவரை பார்த்த போதே உடல் நிலையில் சிறிய பிரச்சனை இருப்பது தெரிந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு ரஜினி அமர்ந்திருந்ததை காண முடிந்தது. 

நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, தனது மனைவி லதாவுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் அதனால் தான் அவர் இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருப்பதாக கூறினார். மேலும் குழந்தைகள் கடத்தப்படுவது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக ரஜினி தெரிவித்தார். குழந்தைகளை கடத்துவதற்கு என்று ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி வைத்திருப்பது மிக மிக மோசமான செயல் என்று அவர் கூறினார். குழந்தைகள் கடத்தலுக்கு என்று மாஃபியா கும்பல் இயங்குவதாகவும் ரஜினி தெரிவித்தார். 

மேற்கத்திய நாடுகளில் குழந்தைகள் நலனுக்கு என்று அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் குழந்தைகள் கண்டுகொள்ளப்படவில்லை. குழந்தைகள் கடத்தலும் கண்டுகொள்ளப்படவில்லை. குழந்தைகளை மத்திய அரசும் கவனிக்கவில்லை, மாநில அரசும் கவனிக்கவில்லை. குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைத்து சம்பாதிக்கிறார்கள். இதனை எல்லாம் ஏன் மத்திய, மாநில அரசுகள் தடுப்பதில்லை.

கொலை குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனையை குழந்தையை வைத்து பிச்சை எடுப்பவர்களுக்கும் வழங்க வேண்டும்.  இவ்வாறு நிகழ்ச்சியில் ரஜினி பேசியுள்ளார். இதுநாள் வரை ரஜினி எங்கும் மத்திய அரசை விமர்சித்து பேசியதே இல்லை. ஆனால் குழந்தைகள் விவகாரத்தில் ரஜினி மத்திய அரசை விமர்சித்து பேசியது அரங்கில் இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ரஜினி திடீரென மத்திய அரசுக்கு எதிராக எடுத்துள்ள நிலைப்பாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.