* பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள். இந்த ஆண்டு அதை எழுச்சியாக கொண்டாடிடும் திட்டத்தில் உள்ளது அ.தி.மு.க. இதன்  ஹைலைட்டாக, மெரீனாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்துவிட முடிவெடுத்துள்ளனர். அதை பிரதமர் திறந்து வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் விரும்புகிறாராம். இது தொடர்பாக பிரதமரிடம் பேசவே செய்துவிட்டார் என்றும் ஒரு தகவல். -பத்திரிக்கை செய்தி. 

* தி.க.வினர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கி பிழைப்பு நடத்துகின்றனர். பிற மத கடவுள்களை திட்டினால் சும்மா விடுவார்களா? ரஜினியை மிரட்டிப் பார்க்கின்றனர். ரஜினி நியாயவாதி, நல்ல மனிதர், கள்ளம் கபடம் இல்லாமல் மனதில் பட்டதை பேசுபவர். அவரின் ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது. -    ராஜேந்திர பாலாஜி (பால்வளத்துறை அமைச்சர்)

* சிவபெருமான் தமிழகத்தில் தான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாகவும், அந்த நிகழ்வுகளில் தமிழிலிலேயே அவர் உரையாடியதாகவும் சிவனடியார்கள் கூறுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மதித்து, தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்வதுதானே சரியாக இருக்க முடியும். - டாக்டர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)

* பொதுவாழ்க்கையில் நான் எந்த தவறும் செய்ததில்லை. என் சொத்து கணக்கை மட்டுமல்ல, என் குடும்பத்தினர் சொத்து கணக்கையும் பகிரங்கப்படுத்த தயாஆக இருக்கிறேன். மணல் கடத்தல் தொடர்பாக என் மீது வீண் பழி சுமத்துவோர், இவ்வாறு செய்ய தயாரா? -பொன்.ராதாகிருஷ்ணன் (மாஜி மத்தியமைச்சர்)

* ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர். அவர்கள் மேல்நிலை கல்வியை படித்து முடிப்பதற்குள், ஐந்து பொதுத் தேர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது கூடாது. - கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

* அ.தி.மு.க. சார்பாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை யூனியன் தேர்தலில் நின்ற பெண் வேட்பாளரை, ஊருக்குள் நுழைந்து பிரசாரம் செய்யக் கூட அமைச்சர் கருப்பணின் ஆதரவு தரப்பு விடவில்லை. அவரைக் கேவலமாக பேசியும், திட்டியும் விரட்டினார்கள். ஆளுங்கட்சியின் பெண் வேட்பாளர்களுக்கு அமைச்சரின் படையினாலேயே மிரட்டல் வரும் கொடுமை வேறெங்காவது நடந்திருக்கிறதா? -தோப்பு வெங்கடாசலம் (ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.)

* எம்.ஜி.ஆர். நடிப்பை திரையில் பார்த்துத்தான் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தனர். ஆனால் ரஜினியை பொறுத்தவரை அவரது நிஜத்தோற்றத்தைப் பார்த்துதான் மக்கள் நம்புகிறார்கள். திரையில் பிம்பத்தை ஏற்படுத்திய எம்.ஜி.ஆரையே அசைக்க முடியவில்லை. ஆனால் ரஜினி பிம்பம் இல்லை. அதனால் தவறான நோக்கத்துடன் அவரை யாரும் நெருங்க கூட  முடியாது. -ஷாஜி (ரஜினி மக்கள் மன்ற துணைத்தலைவர்)

* கமலைப் பற்றி வெளியே உலவும் தகவல்கள் பொய்யானவை. உண்மையைச் சொல்லப்போனால் அவரது வேகத்துக்கு எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததால் அரசியலில் லேசாக சிறு இடைவெளி விட்டார். அவ்வளவுதான். பிப்ரவரி 21ம் தேதி கட்சியின் மூன்றாவது ஆண்டு விழா வருகிறது. அதன் பின் மீண்டும் எழுச்சிப் பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொள்கிறார். -    மவுரியா (ம.நீ.ம. துணைத்தலைவர்)

* திராவிடர் கழகத்தினரின் விஷம செயல் குறித்து, நடிகர் ரஜினி பேசியதை, அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலர் கண்டித்துள்ளனர். இதனால் அக்கட்சியின் ஓட்டு வங்கி பாதிப்படையும். இந்துக்களுக்கு எதிராக பேசி வரும், தி.க.வினர் எதிர்வினையை இப்போது சந்தித்து வருகின்றனர். - ஜெயக்குமார் (இந்து முன்னணி துணைத்தலைவர்)

* ரஜினி தும்மினாலே அது அகில இந்தியச் செய்தியாகிவிடும். முரசொலியைப் பற்றி உரசிப் பேசினால் கேட்கவா வேண்டும்? இப்போது விவகாரம் பெரியாரை மையம் கொண்டு நடப்பதால், கருப்புச்சட்டைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து ரஜினி வீட்டை முற்றுகையிட்டு வருகின்றனர். ரஜினிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து வரும் விவகாரத்தைக் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரஜினிக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா? என ஆலோசித்து வருகிறாராம். (இக்கட்டில் ரஜினிக்கு கை கொடுப்பதன் மூலம் நாளைக்கு ரஜினியால் தங்களுக்கு பல அரசியல் ஆதாயங்கள் கிடைக்கலாம்! என பா.ஜ.க. நம்புகிறதாம்) -    பத்திரிக்கை செய்தி.