நாடகம் நடத்துவது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அல்ல என்றும் நாடகம் ஆடுவது மத்தியில் உள்ள பாஜக அரசுதான் என்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை கொறடா விஜயதாரணி கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதன் பின்னர், திமுக, காங்., விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவிரி மீட்பு நடை பயணம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அண்ணாசாலை மற்றும் சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, எதிர்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கருப்பு கொடி காட்டின. இது குறித்து காங்கிரஸ் சட்டப்பேரவை கொறடா விஜயதாரணி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

பாஜகவும் மத்திய அரசும்தான் காவிரியை கொண்டு வர முடியும் என்று பாஜக கூறியது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்க சொல்லியும், அமைக்காததன் பின்னணி என்ன? ஏன் இதை நீட்டிக் கொண்டே போகிறார்கள்.
எனவேதான் அரசியல் கட்சிகளும், விவசாயிகளும், மக்களும் போராட்டத்தில் இறங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காவிரி விவகாரத்தில் தீர்வு கண்டிருந்தால் கருப்பு கொடி போராட்டத்துக்கு அவசியமே இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. ஆனால கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக தள்ளிக்கொண்டே செல்கிறார்கள் என்று விஜயதாரணி கூறினார்.

ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் உண்ணாவிரதத்தில் பாஜகவினர் ஈடுபடுகின்றனர். ஆட்சிப் பொறுப்பில், அதிகாரத்தில், நடைமுறைப்படுத்தக்கூடிய இடத்தில் இருக்கக்கூடிய அரசு உண்ணாவிரதத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் அரசின் இயலாமையைக் காட்டுகிறது. இயலாமையைக்
காண்பிக்கக்கூடியவர்கள் ஆட்சிக்கு தகுதி உள்ளவர்களா? என்று விஜயதாரணி கேள்வி எழுப்பினார்.

நாடகம் நடத்துவது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அல்ல.. நாடகம் ஆடுவது மத்தியில் உள்ள பாஜக அரசுதான். காவிரி மேலாண் வாரியம் அமைத்தால், கர்நாடக தேர்தலில் பாதிப்பு வரும் என்று பயப்படுகிறார்கள். 

உலகம் முழுவதும் சுற்றி வந்த மோடியால் அவரது நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை செயல்படுத்தமுடியாமல் அவரே உண்ணாவிரதம் இருக்கிறார் என்று உலகத் தலைவர்கள் நகைக்கிறார்கள் என்றும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் விஜயதாரணி கூறினார்.