சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறி வைத்து சி.பி.ஐ நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் உண்மையில் சிறையில் உள்ள சசிகலாவை தான் மத்திய அரசு குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ் வீட்டில் நடந்த சோதனையின் போது கிடைத்த டைரி மூலம் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்கள் தொடங்கி சுகாதாரத்துறை அமைச்சர் வரை பலரும் மாதம் மாதம் மாமூல் பெற்று வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையில் உயர் அதிகாரிகளாக உள்ளவர்கள் குட்கா உரிமையாளர் மாதவ ராவிடம் மாதம் மாதம் வாங்கிய மாமூல் தொகையை குறிப்பிட்டு வருமான வரித்துறை ஒரு கடிதம் அனுப்பியது. 
  
அதிலும் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் சென்னை காவல் ஆணையர்களாக இருந்த அதிகாரிகள் மாதம் மாதம் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றதாக வருமான வரித்துறை கடந்த 2016ல் தமிழக டி.ஜி.பியாக இருந்த அசோக்குமாருக்கு கடிதம் எழுதியது. இந்த கடிதத்தை பெற்ற டி.ஜி.பி அசோக் குமார் புகாருக்கு ஆளான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்துடன் வருமானவரித்துறை அனுப்பிய கடிதத்தின் நகலையும் அப்போதைய டி.ஜி.பி அசோக்குமார் உள்துறை செயலாளருக்கு அனுப்பியிருந்தார்.

(இதனை தொடர்ந்து அசோக்குமார் மிரட்டப்பட்டு பதவி விலகச் செய்யப்பட்டது தனிக்கதை) இந்த இரண்டு கடிதங்களையும் மேல்நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பார்வைக்கு அதாவது அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் பார்வைக்கு உள்துறை செயலாளர் அனுப்பி வைத்திருந்தார். இந்த இரண்டு கடிதங்களும் தான் கடந்த ஆண்டு போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது சசிகலா அறையில் சிக்கின.   அதாவது உள்துறை செயலாளர் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பிய இரண்டு கடிதங்கள் சசிகலா அறையில் இருந்தன. மேலும் அந்த கடிதங்கள் மீது மேல் நடவடிக்கை தேவையில்லை என்று குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அந்த குறிப்பை எழுதியதும் சசிகலா தான் என்று வருமான வரித்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. 

தற்போது சி.பி.ஐ விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்டோரை வளைத்திருந்தாலும் அவர்களிடம் இருந்த குறிப்பிட்ட ஒரு வாக்குமூலத்தை சி.பி.ஐ அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதாவது குட்கா விவகாரத்தில் பெறப்பட்ட மாமூலில் சசிகலாவுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது என்று வாக்குமூலம் பெற முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இப்படியாக வாக்குமூலம் கொடுத்தால் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி ராஜேந்திரன் மீதான நடவடிக்கையை மென்மையாக்கவும் சி.பி.ஐ தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. 

 குட்கா விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணம் கைமாறியது தெரிந்த பின்னரும் அப்போது அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மற்றும் சென்னை காவல் ஆணையர்களாக இருந்த ஜார்ஜ், ராஜேந்திரன் ஆகியோர் மாற்றப்படாததன் மூலமே அவர்கள் தங்களுக்கு கிடைத்த  மாமூலில் கார்டனுக்கு பங்கு கொடுத்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது என்கிறது சி.பி.ஐ வட்டாரம். எனவே இந்த விவகாரத்தில் சசிகலா பெயரை இழுத்து அவர் மீது புதிதாக வழக்குப் பதிவு செய்யவே விஜயபாஸ்கர், ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரை சி.பி.ஐ வளைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.