சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில் அது தொடர்பான உண்மையை தெரிவிக்காமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே தவறான தகவலை கொடுத்ததாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

இன்று காலை எட்டு மணி அளவில் விஜயபாஸ்கர், ஜார்ஜ், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீட்டிற்குள் சி.பி.ஐ அதிகாரிகள் நுழைந்தனர். இது தொடர்பான தகவல் சுமார் ஒன்பதரை மணிவாக்கில் தான் ஊடகங்களில் வெளியானது. உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உதவியாளரை அழைத்து டி.ஜி.பி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசுமாறு கூறியுள்ளார்.


   
இதனை தொடர்ந்து டி.ஜி.பிக்கு போன் செய்துள்ளார் உதவியாளர். அவரும் போனை எடுத்து வீட்டிற்குசி.பி.ஐ அதிகாரிகள் வந்துள்ள தகவலை முதலமைச்சரின் உதவியாளரிடம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முதலமைச்சரின் உதவியாளர் போன் செய்துள்ளார். போனை எடுத்த விஜயபாஸ்கர் தன் வீட்டில் சி.பி.ஐ சோதனை எதுவும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை உதவியாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளார். முதலமைச்சரும் கூட விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ சோதனை இல்லை என்று நம்பியுள்ளார். இதனை தொடர்ந்து முதலமைச்சரின் உதவியாளர் அனைத்து ஊடகங்களையும் தொடர்பு கொண்டு விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு இல்லை என்று கூறியுள்ளார். இதனை நம்பி சில ஊடகங்களும் கூட விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்கிற செய்தியை நிறுத்தின.

அதே சமயம் விஜயபாஸ்கர் வீட்டிற்கு நேரில் சென்று உறுதிப்படுத்த முயன்ற செய்தியாளர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் செய்தியாளர்கள் வாக்குவாதம் செய்த பிறகு அனுமதி கிடைத்தது. உள்ளே சென்று பார்த்த போது தான் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து செய்தியை நிறுத்திய ஊடகங்கள் மீண்டும் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை என்கிற தகவலை ஒளிபரப்ப ஆரம்பித்தன.

மேலும் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடைபெறுவது உண்மை தான் என்று முதலமைச்சரின் உதவியாளரை அழைத்து செய்தியாளர்கள் கூறினர். இதனை தொடர்ந்து மீண்டும் விஜயபாஸ்கரை அழைத்த முதலமைச்சரின் உதவியாளர், சற்று கடுமையாக பேசியுள்ளார். அதற்கு தன்னிடம் விசாரணை நடத்த மட்டுமே சி.பி.ஐ அதிகாரிகள் வந்ததாகவும் தனது வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை என்றும் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். இந்த தகவல் உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறப்பட்டது. இதனை கேட்ட எடப்பாடி, ஓ நம்ம காதுலயே பூ சுத்த பாக்குறாங்களா என்று சிரித்துள்ளார்.