ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுஜினா சவுத்ரி. இவர் கடந்த பாஜக ஆட்சியின்போது அறிவியல் வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தவர். பாஜகவில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி தனது கூட்டணி முறிந்தபோது தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இவர் தற்போது தெலங்கானா மாநிலம், ஐதராபாத் பஞ்சாகுண்டாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஐதராபாத், சென்னை, பெங்களூரில் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளன. 

கடந்த 1ம் தேதி சென்னை, பெங்களூரில் உள்ள இவருடைய வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள பஞ்சாகுண்டாவில் சுஜினா சவுத்ரி அலுவலகத்தில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக் கூடிய வெஸ்டன் கிராம்டன் இன்ஜினியரிங் நிறுவனத்தின் மூலமாக ஆந்திரா வங்கியில் ரூ71 கோடி, சென்ட்ரல் வங்கியில் ரூ120 கோடி, கார்ப்பரேஷன் வங்கியில் ரூ124 கோடி கடன் பெற்று, அதனை சுஜினா சவுத்ரியின் பினாமி நிறுவனங்களுக்கு கொடுத்ததாகவும், வாங்கிய கடனை செலுத்தாத நிலையில் வெஸ்டன் கிராம்டன் இன்ஜினியரிங் நிறுவனத்தின் இயக்குனர் சீனிவாஸ் உள்ளிட்ட 4 இயக்குனர்கள் மீது சிபிஐ 2017ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, சுஜினா சவுத்ரியின் பினாமி நிறுவனங்கள் என்ற பெயரில், எந்தவித நிறுவனமும் இல்லாமல் ரப்பர் ஸ்டாம்ப் மட்டும் உள்ள நிறுவனத்திற்கு பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. இதனால், சுஜினா சவுத்ரிக்கு சொந்தமான சில நிறுவனங்களை சிபிஐ தற்காலிகமாக ஜப்தி செய்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக ஐதராபாத், சென்னை, பெங்களூரில் உள்ள சுஜினா சவுத்ரியின் வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளனர். 

சிபிஐ சோதனை நடைபெற்று வரும் முக்கியமான இந்த நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேர்தல் தோல்விக்குப் பின் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார்.