ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.  

தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உடனடியாக விசாரிக்க மறுத்து விட்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் அயோத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கோரிக்கை விடுத்தனர். அயோத்தி வழக்கு நடைபெற்று வருவதால் உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்து விட்டார்.

முன்னதாக ப.சிதம்பரம் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுத்து விட்டார். தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என ரமணா விலகிக் கொண்டதால் ப.சிதம்பரம் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனக் கருதப்படுகிறது. அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியாத நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு சிபை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இந்த நிலையில் கேவியட் மனுவை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதாவது தங்களது கருத்தை கேட்காமல் எதிராளிக்கு சாதமாக எந்த முடிவையும் அறிவிக்கக்கூடாது என சிபிஐ கூறியுள்ளது. இதனால், உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்திற்கு சிக்கல் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.