சிபிஐ வரலாற்றில் லோக்கல் போலீஸை போல நடந்து கைது நடவடிக்கை மேற்கொள்வதை இப்போதுதான் பார்க்கிறேன் என்று சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். ஆனால், அவரை கைது செய்ய சிபிஐயும் அமலாக்கத்துறையும் நேற்று முன் தினம் முதல் மேற்கொண்ட நடவடிக்கைகள் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளன.  ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் குறித்து சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் அதிருப்தி தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் தெரிவித்த கருத்துகள்: 
 “இந்த கைது நடவடிக்கையைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. 35 ஆண்டுகள் சிபிஐ-யில் பணியாற்றி இருக்கிறேன். வழக்கமாக ஒருவரை கைது செய்ய சிபிஐ முடிவு செய்தால், நேரடியாகச் சென்று கைது செய்யவே மாட்டார்கள். விசாரணைக்கு சம்மன்தான் அனுப்புவோம். அங்கு விசாரணையின் முடிவில் கைது செய்து அறிவிப்பதுதான் நடைமுறை. இந்த வழக்கில் முன் ஜாமீனை நிராகரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தது.
ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை வெள்ளிக் கிழமை எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என அதுவரை பொறுத்திருந்து பார்த்திருக்கலாமே. இரண்டு ஆண்டுகளாக ஆஜரானவர், 2 மணி நேரத்தில் எங்கேயாவது ஓடிவிடவா போகிறார்? வீட்டுக்கு சென்று நோட்டீஸ் ஒட்டுவது, சுவர் ஏறி குதித்து செல்வது போன்ற நடவடிக்கையை சிபிஐ எந்தக் காலத்திலும் செய்ததில்லை. லோக்கல் போலீஸ்தான் இதுபோன்று செய்வார்கள். இந்திரா காந்தியை கைதுசெய்தபோதுகூட சிபிஐ இப்படியெல்லாம் நடந்ததில்லை. இந்த வழக்கில் சிபிஐ காட்டும் அவசரத்தை நான் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.