காவிரி உரிமையை நிலைநாட்ட உணர்ச்சிமிக்க போராட்டம் நடத்துபவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும், நாளைய முழு அடைப்பு வெற்றி பெற அனைவரும் கைகோர்ப்போம்... களம் காண்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

காவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அமைக்காமல், மேலும் 3 மாதம் கால அவகாசம்
கேட்டு மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. அதற்கு உச்சநீதிமன்றம், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்தது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலம் தாழ்த்திவரும் மத்திய அரசைக் கண்டித்தும், வாரியத்தை விரைந்து அமைக்க வலியுறுத்தியும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தி.மு.க சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், வரும் 5-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் வலுப்பெற்று வருகிறது.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ் உள்ளட்ட கட்சிகள் நாள் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ள நிலையில், போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பேருந்துகள் இயக்கமாட்டோம் என்று தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன. இதனால், பலத்த பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சமாளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணியில் சுமார் 1 லட்சம் போலீசார் ஈடுபட உள்ளனர். 

இந்த நிலையில் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் முழு போராட்டம் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் காவிரி உரிமையை நிலைநாட்ட உணர்ச்சிமிக்க போராட்டம் நடத்தி வரும் ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. டெல்லியின் வஞ்சகத்துக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ள தமிழர்களின் உணர்வை, நாட்டுக்கு உணர்த்தும் நாளைய முழு அடைப்பு, முழு வெற்றி பெறட்டும். அனைவரும் கை கோர்ப்போம்... களம் காண்போம்! என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.