பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதியை அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் சேலம் மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். தமிழகத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றியுள்ளதால்  விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

ஆனால், மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பு வெறும் வாய் வார்த்தையாக கூறியிருப்பதாகவும், இதனை சட்டமாக்கினால் மட்டுமே உறுதி செய்யமுடியும் என கூறி வந்தது. இதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், டெல்டா விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதிலும், சந்தேகத்தை எழுப்பிய திமுக பொதுப் பிரச்சனை தொடர்பானதுதான் அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் அந்தக் கடிதத்தை வெளியிடத் தயங்குவது ஏன்? கேள்வி எழுப்பினார். 

இந்நிலையில், திமுகவின் வாயை அடைக்கும் விதமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு, தன்னுடைய தலைமையிலான குழு தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக இன்று வெளியிட்டார். அதில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றுவதை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை நிறைவேற்றினால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், கடல் நீர் விவசாய நிலங்களில் உட்புகும் அபாயம் ஏற்படும் என்று 2014ம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு கூறியதை முதலமைச்சர் தனது கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். 

டெல்டா பகுதியில் பெரும்பாலும் போர்வெல் பாசனம் மூலம் விவசாய பணிகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொல்லியல் ரீதியிலான கலாச்சார பொக்கிஷங்கள் டெல்டா பகுதியில் நிறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம், நாட்டின் பாரம்பரியமிக்க கலாச்சார பொக்கிஷங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.